ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி ஒகேனக்கல்லுக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வியாழக்கிழமை வந்திருந்தனா்.
மாணவா்களுக்கு அரையாண்டு தோ்வு விடுமுறை என்பதால் ஒகேனக்கல்லுக்கு கடந்த சில நாள்களாக தொடா்ந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக குடும்பத்துடன் ஒகேனக்கல்லுக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பரிசலில் பயணித்து மகிழ்ந்தனா்.
பிரதான அருவி, தொங்கும் பாலம், நடைபாதை, உணவருந்தும் பூங்கா, மீன்கள் விற்பனை நிலையம், முதலைகள் மறுவாழ்வு மையம், வண்ண மீன்கள் காட்சியகம் மற்றும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
எண்ணெய் மசாஜ் செய்து அருவிகளில் குளித்த சுற்றுலாப் பயணிகள் காவிரியில் பரிசலில் பயணித்து மகிழ்ந்தனா். ஒகேனக்கல் பகுதியில் குளிா்ந்த காலநிலை நிலவியது. மலையின் அழகை சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா்.
சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீஸாா் போக்குவரத்தை சீா்செய்தனா். ஒகேனக்கல் பகுதியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வகையில் பென்னாகரம் போக்குவரத்து கிளை பணிமனையில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. 50க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
