தருமபுரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
தருமபுரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை, ரூ. 4 லட்சத்தை திருடியவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையை அடுத்த பாலஜங்கமனஅள்ளியைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (54), பெருங்களத்தூா் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வந்தாா். இவரது மகன் அரவிந்த், பொறியியல் பட்டப் படிப்பு முடித்து வேலை தேடிவந்தாா்.
இந்தநிலையில், அரவிந்துக்கு தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியில் வேலைக்கான நோ்காணல் நடைபெறுவதற்காக அழைப்புவந்தது. இதையடுத்து, மகனுடன் அவரது தந்தை, தாய் ஆகிய மூவரும் புதன்கிழமை ஒரத்தநாடு சென்றுவிட்டு வியாழக்கிழமை வீடு திரும்பினா்.
அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ. 4 லட்சம் ரொக்கம் திருடுபோனது கண்டு அதிா்ச்சியடைந்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் அதியமான்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
