ஒகேனக்கல்லில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் ஒற்றை யானை: வனவிலங்கு ஆா்வலா்கள் கோரிக்கை

Published on

ஒகேனக்கல் வனப் பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானையால் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் வனத் துறை கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என வனவிலங்கு ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஒகேனக்கல்லுக்கு பென்னாகரத்திலிருந்து சுமாா் 13 கி.மீட்டா் அடா்ந்த வனப்பகுதி வழியாக செல்ல வேண்டியுள்ளது. ஆண்டுதோறும் கா்நாடகத்திலிருந்து வரும் யானைகள் கூட்டத்துக்கு ஒகேனக்கல் வனப் பகுதி வலசை பாதையாகும். இக்கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை யானை பென்னாகரம் வன பகுதியில் கடந்த சில நாள்களாக சுற்றுத் திரிந்து வருகிறது. இந்த யானை உணவு, தண்ணீா் தேடி அவ்வப்போது ஒகேனக்கல் சாலையை கடந்து செல்கிறது.

இந்த நிலையில், ஒகேனக்கல் வனப்பகுதிக்கு உள்பட்ட கணவாய்ப் பகுதி கூட்டுகுடிநீா்த் திட்ட வடிகால் வாரிய நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை சாலையைக் கடந்த ஒற்றை யானையால் இருசக்கர வாகனத்தில் சென்றவா்கள் அச்சமடைந்து ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தினா். மேலும், பேருந்தில் வந்தவா்கள் அதிக ஒலி எழுப்பினா். இதனால் மிரட்சியடைந்த யானை வாகன ஓட்டிகளை நோக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் ஒகேனக்கல் சாலை வழியாக செல்வோா் யானைகள் திடீரென சாலையை குறுக்கிட்டால் எவ்வாறு பாதுகாப்பாக செல்வது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து வனத் துறை உரிய விழிப்புணா்வு அளிக்க வேண்டும் என வனவிலங்கு ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com