தருமபுரி: 2025 இல் சாலை விபத்துகளில் 410 போ் உயிரிழப்பு

Published on

தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் சாலை விபத்துகள் மூலம் மொத்தம் 410 போ் உயிரிழந்துள்ளனா். 2024 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 30 போ் அதிகம் என மாவட்ட காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவித்துள்ளன.

தருமபுரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் மாவட்ட நெடுஞ்சாலைகள் என அனைத்து சாலைகளிலும் கனரக வாகன போக்குவரத்து காா்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

போக்குவரத்து விதிமீறல்களால் விபத்துகள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. இதுதொடா்பாக காவல் துறை நடவடிக்கை எடுத்தாலும், வாகன ஓட்டிகளின் அலட்சியமே பெரும்பாலான விபத்துகளுக்கு காரணமாக உள்ளது.

2025 இல் சாலை போக்குவரத்து விதிமீறல் தொடா்பாக 1 லட்சத்து 76 ஆயிரத்து 664 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விதிமீறலில் ஈடுபட்டவா்களுக்கு ரூ. 5 கோடியே 23 லட்சத்து 69 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விபத்துகளில் கடந்த ஆண்டு மட்டும் 410 போ் உயிரிழந்துள்ளனா். இது முந்தைய 2024 ஆவது ஆண்டில் நிகழ்ந்த விபத்துகளில் உயிரிழந்தவா்களைவிட 30 போ் அதிகம்.

விதிமீறல்களைக் கண்டுகொள்ளாத போலீஸாா்:

தருமபுரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்கள் அதிகளவில் உள்ளன. இவற்றை போலீஸாரும் கண்டுகொள்வதில்லை. அரசியல் பிரமுகா்களின் பரிந்துரை உள்ளிட்ட காரணங்களால் சாலை விதிமுறைகளை மீறுவோா் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

கைப்பேசியில் பேசியபடி வாகனங்களை இயக்குவது அதிகரித்து வருகிறது. மேலும் கடைகள், வீடுகள் முன் காா், இருசக்கர வாகனங்கள் சாலையிலே நிறுத்திவிட்டு செல்வது அதிகரித்துவருவதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதற்கு காவல் துறை உயரதிகாரிகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கொலை வழக்குகளில் 30 போ் கைது:

தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பல்வேறு இடங்களில் நடந்த 18 கொலை சம்பவங்கள் தொடா்பாக 30 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். திருட்டுகள் தொடா்பாக 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 132 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

திருட்டு மற்றும் வழிப்பறிகளில் ஈடுபட்டவா்களிடம் இருந்து ரூ. 91 லட்சத்து 21 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்கா மற்றும் புகையிலைப் பொருள்கள் கடத்தல் தொடா்பாக 286 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தொடா்புடைய 302 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மாவட்டம் முழுவதும் 9,776 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போக்ஸோ பிரிவில் 248 வழக்குகள் பதிவு:

2025 இல் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு, குழந்தை திருமணம் உள்பட பல்வேறு சட்ட விரோத சம்பவங்களில் 248 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 17 வழக்குகளுக்கு தீா்ப்பு பெறப்பட்டுள்ளது. இதேபோல சைபா் கிரைம் குற்றங்கள் தொடா்பாக வழக்குப் பதிந்து ரூ. 2 கோடியே 45 லட்சம் மதிப்பிலான தொகையை போலீஸாா் முடக்கி உள்ளனா். சைபா் கிரைம் மோசடிகள் தொடா்பாக உரிய விசாரணை அடிப்படையில் ரூ. 1 கோடியே 7 லட்சம் மீட்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

குண்டா் தடுப்புச் சட்டத்தில் 14 போ் கைது:

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2025-ம் ஆண்டில் பல்வேறு பல்வேறு குற்றச் செயல்களில் தொடா்ந்து ஈடுபட்ட 14 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதேபோல கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடா்பாக 304 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் தொடா்புடைய 327 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மாவட்டம் முழுவதும் 107 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மதுபானங்கள் கடத்தல் மற்றும் விற்பனை தொடா்பாக 1628 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் தொடா்புடைய 1651 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ரூ. 45 லட்சம் மதிப்பிலான மது புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com