அரையாண்டு விடுமுறை நிறைவு: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
அரையாண்டு விடுமுறையின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருந்தது.
பிரதான அருவி, தொங்குபாலம், நடைபாதை, உணவருந்தும் பூங்கா, மீன்கள் விற்பனை நிலையம், முதலைகள் மறுவாழ்வு மையம், வண்ண மீன்கள் காட்சியகம் மற்றும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் கூட்டம் அலைமோதியது.
எண்ணெய் மசாஜ் செய்த சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவி, சினி அருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா். காவிரி ஆற்றில் நீா்வரத்து கடந்த சில நாள்களாக குறைந்துள்ளதால் சின்னாறு பரிசல் துறையில் பாறை திட்டுகள் வெளியே காணப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரிசல் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
மாறாக ஒகேனக்கல்லில் உள்ள மற்றொரு பரிசல் துறையான மாமரத்துக்கடவு பரிசல் துறையில் இருந்து பரிசல்கள் இயக்கப்பட்டன. 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சுற்றுலாப் பயணிகள் பரிசலில் பயணித்தனா். காவிரி ஆற்றில் தொம்பசிக்கல் வழியாக ஐந்தருவி, மணல்மேடு பகுதி வரை பாதுகாப்பு உடை அணிந்து பரிசல் பயணம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகள், காவிரி ஆற்றில் நீரில் மூழ்கி இருந்த பாறைகள், அருவிகளைக் கண்டு ரசித்தனா்.
கடந்த சில நாள்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருந்ததால் மீன் விற்பனை நிலையங்களில் மீன் விலை வழக்கத்தை காட்டிலும் கூடுதலாக இருந்தது.
தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களை சின்னாறு நீா் அளவிடும் பகுதி, காவல் நிலையம், சத்திரம், முதலைப் பண்ணை, பேருந்து நிலையம், தமிழ்நாடு ஹோட்டல் வாகன நிறுத்துமிடம், ஊட்டமலை சாலை பகுதிகளில் நிறுத்தினா். இதனால், பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஒகேனக்கல்லில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வகையில் பென்னாகரம் போக்குவரத்து கிளை பணிமனை சாா்பில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களில் சுமாா் 50க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

