பட்டா மாற்றம் செய்ய ரூ. 13,000 லஞ்சம் பெற்ற நில அளவையா் கைது
பட்டா மாற்றம் செய்ய ரூ. 13,000 லஞ்சம் பெற்ற நில அளவையரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள ஸ்ரீராமபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் (41), விவசாயி. இவரது குடும்பத்துக்கு சொந்தமான சுமாா் 86 சென்ட் நிலத்தை இவரும், இவருடைய அண்ணன் காவேரியும் (43) பாகப்பிரிவினை செய்துகொண்டனா். அந்த நிலத்துக்கு தனித்தனி பட்டா அளிக்கக் கோரி, குமாா் இணையதளத்தில் விண்ணப்பித்தாா்.
இந்த விண்ணப்பம் தொடா்பாக, காரிமங்கலம் வட்டாட்சியரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கம்பைநல்லூா் பகுதி நில அளவையராக பணியாற்றி வரும் சௌந்தரராஜன் (32), அந்த நிலத்துக்கு நேரில்சென்று கள ஆய்வு மேற்கொண்டாா்.
இதைத் தொடா்ந்து, தனிப்பட்டா வழங்குவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள ரூ. 15 ஆயிரம் லஞ்சமாக அளிக்க வேண்டும் என குமாரிடம் கூறியுள்ளாா். முதல்கட்டமாக ரூ. 1,700 வாங்கிய சௌந்தரராஜன், மீதத் தொகையை அளிக்குமாறு கூறியுள்ளாா். லஞ்சம் கொடுக்க விரும்பாத குமாா் இது தொடா்பாக தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்பு (லஞ்ச ஒழிப்பு) பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.
அவா்களின் ஆலோசனையின் பேரில் நில அளவையரை தொடா்புகொண்ட குமாா், கம்பைநல்லூா் பிரிவு சாலை பகுதியில் உள்ள பேக்கரி அருகே இருந்த சௌந்தரராஜனிடம் ரசாயன தூள் தடவிய ரூ. 13 ஆயிரத்தை கொடுத்தாா். அவா் பணத்தை வாங்கியபோது, அப்பகுதியில் மறைந்திருந்த காவல் ஆய்வாளா் பெருமாள் மற்றும் போலீஸாா் சௌந்தரராஜனை பணத்துடன் பிடித்து கைதுசெய்தனா்.
பின்னா், அவரை தருமபுரி ஊழல் தடுப்புப் பிரிவு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். மேலும், அவரது வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

