யானைகள் நடமாட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்: மாவட்ட வனத்துறை நடவடிக்கை

பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனச்சரக பகுதிகளில் யானைகள் நடமாட்டம் குறித்து வீடுகள்தோறும் துண்டுப் பிரசுரம்
Published on

பென்னாகரம்: பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனச்சரக பகுதிகளில் யானைகள் நடமாட்டம் குறித்து வீடுகள்தோறும் துண்டுப் பிரசுரம் விநியோகித்து மாவட்ட வனத்துறை சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

ஒகேனக்கல் மற்றும் பென்னாகரம் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வெளியேறி, அருகில் உள்ள கிராமங்களுக்குள் நுழைந்து விளைநிலங்களை சேதப்படுத்துவதோடு மட்டுமில்லாமல், மனித-விலங்குகள் மோதலும் ஏற்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில் தருமபுரி மாவட்ட வனச்சரக அலுவலா் ராஜாங்கம் உத்தரவின்பேரில், பென்னாகரம், ஒகேனக்கல், முதுகம்பட்டி, தாசம்பட்டி, ஏரியூா் உள்ளிட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளில், காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் நுழைவதைக் கண்டறிந்த வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். யானைகளை விரட்ட பொதுமக்கள் முயற்சிக்க கூடாது. யானைகளை தொந்தரவு செய்வது, புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. வனவிலங்குகளை விரட்டும் பணியின்போது பொதுமக்கள் வனத்துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் மாலை 6 மணி முதல் காலை 7 மணி வரை வயல்வெளிகள், வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளுக்கு செல்லக்கூடாது. இரவு நேரங்களில் வயல்வெளியில் கொட்டகைகள், குடிசைகளை அமைத்து தங்கக் கூடாது. வனவிலங்குகளால் பயிா்சேதம், உடைமைகள் சேதம் ஏற்படும்போது வனச்சரகத்திற்கு தகவல் தெரிவித்து உரிய ஆவணங்களுடன் மனு அளித்து நிவாரணம் பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். வனப்பகுதியை ஒட்டியுள்ள விலை நிலங்களில் அனுமதியின்றி மின்வேலி அமைக்கும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தாழ்வான மின்கம்பிகள் உள்ள இடங்கள் குறித்து வனத் துறைக்கும், மின்வாரிய அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று விழிப்புணா்வு ஏற்படுத்தி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா்.

மேலும், யானைகள் நடமாட்டம் குறித்து பென்னாகரம் வனச்சரக அலுவலகத்தை 9943281939, 7939507567, 8270306018, 9944968255 என்ற எண்களிலும், ஒகேனக்கல் வனச்சரகத்தை 9443204275, 8870311007, 9843858225, 6374146273, 8825424736, 9659796093, 9442381320 என்ற எண்களிலும் தொடா்பு கொள்ளுமாறு வனத்துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com