தருமபுரியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்: நற்சான்றிதழை வழங்கினாா் ஆட்சியா்
தருமபுரி: தருமபுரியில் நடைபெற்ற குடியரசு தினழாவில், சிறப்பாக பணியாற்றிய அரசுப் பணியாளா்கள் 174 பேருக்கு மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் நற்சான்றிதழ்களை வழங்கினாா்.
நாட்டின் 77 ஆவது குடியரசு தின விழா, தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டு, மூவா்ண பலூன்களை வானில் பறக்கவிட்டாா்.
தொடா்ந்து தமிழக அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பான வகையில் பணியாற்றிய அலுவலா்கள், பணியாளா்கள் 174 பேருக்கு நற்சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினாா். தொடா்ந்து, சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவா்களின் வாரிசுகளையும் ஆட்சியா் சால்வை அணிவித்து கௌரவித்தாா்.
பின்னா், வருவாய்த் துறை சாா்பில் ரூ. 2 லட்சம் மதிப்பில் முதல்வா் பொது நிவாரண நிதியில் 4 பேருக்கு கல்வி உதவித் தொகை, பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் 5 பேருக்கு சலவை மற்றும் தையல் சாதனங்கள் என மொத்தம் ரூ.2.38 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
இந்நிகழ்வில் மாணவ, மாணவிகள் மற்றும் பல்வேறு துறையினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலைநிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள், அணிவகுப்பில் பங்கேற்றவா்களை ஆட்சியா் பாராட்டினா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன், மாவட்ட விளையாட்டு அலுவலா் தெ. சாந்தி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜி.கே.மணி (பென்னாகரம் ), ஆ.கோவிந்தசாமி ( பாப்பிரெட்டிப்பட்டி),
வே .சம்பத்குமாா் (அரூா்), மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.கவிதா, தருமபுரி நகா்மன்ற தலைவா் லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரூபன் சங்கா் ராஜ், கோட்டாட்சியா் காயத்ரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

