சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

தருமபுரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
Published on

தருமபுரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், சின்ன காமாட்சிப்பட்டியைச் சோ்ந்தவா் தா்மன் மகன் ஆதி (20). சந்தூா் அருகே உள்ள தொப்படிகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் சின்னசாமி மகன் கோபி (20). இவா்கள் இருவரும் மொரப்பூா் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் பிஎஸ்சி கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தனா்.

புதன்கிழமை காலை இருவரும் நண்பரின் திருமண விழாவில் பங்கேற்க இருசக்கர வாகனத்தில் மொரப்பூா் சென்று மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். வாகனத்தை ஆதி ஓட்டிவந்தாா்.

மொரப்பூா் அருகே சோலைக்கொட்டாய் பகுதியில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலை மையத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த இருவரையும் அங்கிருந்தவா்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ஆதி இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து மதிக்கோன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com