த.ஞானப்பிரகாசம்
ஒசூர், ஜூலை 14: திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு கிடப்பில் உள்ள ஒசூர் தகவல் தொழில்நுட்பப் பூங்கா (ஐ.டி. பார்க்) அமைக்கும் திட்டத்துக்கு அதிமுக அரசு புத்துயிர் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இத் திட்டம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டால் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெறுவதுடன் தொழில் புரட்சியில் ஒசூருக்கு கூடுதல் அந்தஸ்து கிட்டும் என்று இப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். கிருஷ்ணகிரியில், 26.2.2007-ல் நடைபெற்ற அரசு விழாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் ஒசூர் தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட பெருநகரங்களில் தகவல் தொழில் நுட்பப் பூங்கா அமைத்த பிறகு ஒசூர் "பார்க்' திட்டம் முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, 174 ஏக்கர் அரசு நிலம் தயாராக இருந்தும் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையிலேயே திட்டப் பணிகள் கிடப்பில் உள்ளன. தகவல் தொழில்நுட்பப் புரட்சியில் பிரதான இடம் வகிக்கும் பெங்களூருக்கு அருகில் உள்ள ஒசூர் ஐ.டி. பூங்காவில் தங்களது அலுவலகங்களை நிறுவ சர்வதேச அளவிலான முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் செலுத்தின. இதனால், மதுரை, கோவை, திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த நிறுவனங்கள் தங்களது அலுவலகத்தை அமைக்க முன்வராது என்று நினைத்து ஒசூர் ஐடி பார்க் திட்டத்துக்கு கவனம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இந் நிலையில், விப்ரோ, இன்போசிஸ், டிசிஎஸ், ஹெச்சிஎல் ஆகிய நிறுவனங்கள் ஒசூர் பூங்காவில் இடம் கேட்டு 4 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்து காத்திருக்கின்றன.
ஓர் ஏக்கர் நிலம் ரூ.67 லட்சம் என அரசு விலை நிர்ணயம் செய்தது. பிற நகரங்களில் நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட விலையைவிட இது அதிகம் எனக் கூறப்படுகிறது.
இருப்பினும், 17 நிறுவனங்கள் முன்பதிவு செய்து காத்திருக்கின்றன. கடந்த ஆட்சியில், இத் திட்டத்துக்காக சுமார் 14,000 சதுர அடியில் எல்காட் அலுவலகம் அமைக்கவும், ரூ.50 கோடியில் உலகத் தரம் வாய்ந்த சாலை வசதி, மின்சார வசதி, தொலைபேசி சேவை, அகண்ட அலைவரிசை உள்ளிட்ட வசதிகளுக்கு அரசு நிதி ஒதுக்கியது. ஆனால், எந்த வசதியும் செய்யப்படவில்லை. தொழிற்சாலைகளை அமைக்க நிலம் ஒதுக்கீடு பெற்ற ஒரு சில நிறுவனங்களும் இன்னும் ஆரம்ப கட்டப் பணிகளைக் கூடத் தொடங்கவில்லை.
மென்பொருள் நிறுவனங்களில் முன்னணியில் உள்ள பல நிறுவனங்களும் தங்களது அலுவலகத்தை நிறுவ ஆர்வமுடன் உள்ள சூழலில், போதிய அனுபவமில்லாத நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கப்பட்டதாலேயே தொழிற்சாலைகளை தொடங்காமல் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
ஒசூரில் மென்பொருள் நிறுவனங்களை அமைக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மென்பொருள் பட்டதாரிகள் மற்றும் வேலைதேடும் இளைஞர்கள், பெண்களின் நீண்ட நாளைய கோரிக்கையாக உள்ளது. இத் திட்டம் செயல்வடிவம் பெற்றால் இதைச் சார்ந்து பல்வேறு தொழில்களும் வளர்ச்சி பெறும் என்று இப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.