தருமபுரி, ஜூலை 21: குழந்தைத் தொழிலாளியாக இருந்த நாமக்கல்லை சேர்ந்த எம்.ராமலிங்கம் (20), தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த எம்.மூர்த்தி (18) ஆகிய இருவரும் இப்போது எம்பிபிஎஸ் படிக்கத் தேர்வாகியுள்ளனர்.
இவர்கள் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் கீழ் இயங்கும் சிறப்புப் பள்ளியில் படித்து எம்பிபிஎஸ் படிப்புக்கு தேர்வாகியுள்ளது நாட்டிலேயே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்கு முறையான கல்வி வழங்கி மறுவாழ்வு அளிக்கும் வகையில் 1995-ல் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் தொடங்கப்பட்டது. இத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் 384 சிறப்புப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு சுமார் 14,464 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
சிறப்புப் பள்ளியில் படித்த ராமலிங்கமும், மூர்த்தியும் எம்.பி.பி.எஸ். படிக்கத் தேர்வாகியுள்ளனர்.
பிளஸ்-2 தேர்வில் ராமலிங்கம் 1,160 மதிப்பெண்கள் பெற்றார் (தமிழ்-193, ஆங்கிலம்-181, கணிதம்-192, இயற்பியல்-197, வேதியியல்-197, உயிரியியல்-200).
மூர்த்தி 1,123 மதிப்பெண்கள் பெற்றார் (தமிழ்-192, ஆங்கிலம்-167, கணிதம்-187, இயற்பியல்-185, வேதியியல்-198, உயிரியல்-194). இவரது கட் ஆஃப் 192.75.
குழந்தைத் தொழிலாளியாக மாறிய அவலம்
நாமக்கல் மாவட்டம் பெரியமணலியை சேர்ந்த முருகனின் மகனான ராமலிங்கம் 5-ம் வகுப்பு முடித்த பின்னர் தறிப்பட்டறையில் வேலைபார்த்தார். அங்கிருந்து மீட்கப்பட்டு, சிறப்புப் பள்ளியிலும் பின்னர் வேலக்கவுண்டம்பாளையம் கொங்குநாடு பள்ளியிலும் படித்தார். இப்போது திருச்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது.
அரூர் அருகே கைலாயபுரத்தைச் சேர்ந்த முருகன்-பழனியம்மாள் தம்பதியின் மூத்த மகனான மூர்த்தி, அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படித்தார். முதல் மாணவராகவே தேர்ச்சி பெற்றார்.
குடும்பப் பிரச்சினை காரணமாக மூர்த்தியால் 5-ம் வகுப்பு இறுதித் தேர்வை எழுத முடியவில்லை. இதைத் தொடர்ந்து தாயுடன் பெங்களூர் சென்று கட்டடப் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந் நிலையில், திருவிழாவில் பங்கேற்க சொந்த கிராமத்துக்கு வந்தார். அப்போது சிறப்புப் பள்ளி ஆசிரியர்கள் சிவக்குமார், ராமச்சந்திரன் ஆகியோரின் உதவியுடன் சிறப்புப் பள்ளியில் சேர்ந்தார். பின்னர் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட உதவியுடன் ஊத்தங்கரை அரசு உயர்நிலைப்பள்ளியில் 9, 10-ம் வகுப்பு படித்தார். 10-ம் வகுப்பில் 459 மதிப்பெண்கள் பெற்றதால், அரசு நிதி உதவியுடன் தருமபுரியில் உள்ள விஜய் வித்யாலயா பள்ளியில் பிளஸ்-2 வரை படித்தார்.
வேதனையிலும் சாதனை படைக்க முடியும்!
இது குறித்து தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட தருமபுரி மாவட்ட இயக்குநர் என்.சரவணன் கூறியது: தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 13,871 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 7,165 மாணவ, மாணவிகள் சிறப்புப் பள்ளியில் இருந்து சாதாரணப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இப்போது 828 பேர் பல்வேறு பள்ளிகளில் படித்து வருகின்றனர். 70 பேர் உயர்கல்வி படித்து வருகின்றனர். தருமபுரையச் சேர்ந்த கபீர்தாஸ், தமிழகத்திலேயே முதல்முறையாக பிஹெச்டி படித்து வருகிறார். மற்றொருவர் பிடெக் படித்து வருகிறார். இப்போது மாணவர் மூர்த்தி எம்.பி.பி.எஸ். படிக்க தேர்வாகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வேதனையிலும் சாதனை படைக்க முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றார்.
தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட நாமக்கல் மாவட்ட இயக்குநர் ஏ.பி.அந்தோணி ஜென்னிட் கூறியது: நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 1,732 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதில் சிலர் பொறியியல் பட்டம் படித்து வருகின்றனர். எம்.பி.பிஎஸ். படிக்க ராமலிங்கத்துக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. குழந்தைத் தொழிலாளிகளாலும் சாதிக்க முடியும் என்பதற்கு இந்த இரு மாணவர்களின் சாதனையே சான்று என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.