இடைநிலை ஆசிரியர் படிப்புக்கு குறைந்தது மோகம்; 160 பள்ளிகள் மூடல்!

தருமபுரி, செப்.6: தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர் படிப்புக்கான மோகம் குறைந்து வருகிறது. இதனால், தமிழகம் முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 160 தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.  பத்து
Updated on
2 min read

தருமபுரி, செப்.6: தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர் படிப்புக்கான மோகம் குறைந்து வருகிறது. இதனால், தமிழகம் முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 160 தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

 பத்து ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் கல்லூரிகளுக்கு இணையாக ஆசிரியர் பயிற்சிப்  பள்ளிகளில் மாணவ, மாணவிகள் போட்டி போட்டு சேர்ந்தனர். ரூ.3 லட்சம் வரை பணம் கட்டி சேர்ந்தவர்களும் உண்டு.

 ஆனால், இப்போது அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தையும்விட குறைவாக (ரூ.23,500) பணம் வாங்க தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் தயாராக இருந்தும் மாணவர்கள் சேரத் தயாராக இல்லை.

 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் (டயட்) 30 இடங்களிலும், அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் 8 இடங்களிலும் உள்ளன. இதுதவிர மாநிலம் முழுவதும் 682 தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் உள்ளன.

 டயட் மற்றும் அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் உள்ள இடங்கள் பெரும்பாலும் நிரம்பிவிடுகின்றன. ஆனால், தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் சராசரியாக 35-40 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.

 இந்த ஆண்டில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட கலந்தாய்வில் அரசு ஒதுக்கீடு இடங்களில் 600 மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்குக் கூட இடம் கிடைத்துள்ளது.

  பிற மாவட்டங்களை ஒப்பிடும்போது வடமாவட்டங்களில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில்தான் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளது.

 தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் 25 சதவீதத்துக்கும் குறைவாக மாணவர் சேர்க்கை நடந்த பள்ளிகள் எண்ணிக்கை அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சில ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் மொத்தமுள்ள 100 இடங்களில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில்தான் மாணவர்கள் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 மாணவர் சேர்க்கை குறைந்ததால் தமிழகம் முழுவதும் 2000-10, 201-11-ம் ஆண்டுகளில் தலா 40 தனியார் பள்ளிகளும், 2011-12-ம் ஆண்டில் 80 பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.

மோகம் குறையக் காரணம் என்ன?

 தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்புவரை ஆண்டுக்கு 75,000 இடைநிலை ஆசிரியர்கள் பயிற்சி பெற்று வந்தனர். இப்போது ஆண்டுக்கு 60,000 பேர் பயிற்சி முடித்து வருகின்றனர்.

 ஆனால், அரசுப் பள்ளிகளில் காலியிடங்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாகத் தான் உள்ளது. 2007-ம் ஆண்டு முதல் 1 முதல் 5-ம் வகுப்பு வரை மட்டும்தான் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களை பணியமர்த்த வேண்டும் என அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

 இதனால், இடைநிலை  ஆசிரியர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது.

இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களைவிட, பட்டதாரி ஆசிரியர்களின் தரம் அதிகமாக இருப்பதால் தனியார் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளிலும் பி.எட். பட்டதாரிகளுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆசிரியர் பணி கிடைப்பது அரிதாகிவிட்டதால் இடைநிலை ஆசிரியர் படிப்புக்கான மோகமும் படிப்படியாகக் குறைந்துவிட்டது.

தரத்தை உயர்த்துவது அவசியம்!

ஆசிரியர் பயிற்சிப் படிப்பின் தரத்தை உயர்த்தினால்தான் தனியார் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் படிப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்கிறார் தமிழ்நாடு மாவட்ட ஆசிரியர் கல்வி கல்வியாளர்கள் சங்கத் மாநிலத் தலைவர் ஜெயராமன்.

 இதற்காக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதை 4 ஆண்டு படிப்பாக மாற்றுவது குறித்தும் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

  இடைநிலை ஆசிரியர் படிப்பில் சேர பிளஸ் 2 தகுதி என்பதை பட்டப் படிப்பாக உயர்த்தலாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com