மருத்துவர்கள் பற்றாக்குறையால் தடுமாறும் ராசிபுரம் அரசு மருத்துவமனை

ராசிபுரம்,பிப்.15: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனை தேசிய தரச்சான்று பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், மருத்துவனையின் உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணியில் சுகாதாரத
Updated on
2 min read

ராசிபுரம்,பிப்.15: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனை தேசிய தரச்சான்று பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், மருத்துவனையின் உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணியில் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது. தேசிய தரச்சான்று பெரும் பணிகள் நடந்துவரும் நிலையில், மருத்துவர்கள் பற்றாக்குறை தரச்சான்று கிடைப்பதை கேள்விக்குறியாக்கியுள்ளது.

தென் மாநிலங்கள் அளவில் நாமக்கல்லில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மட்டுமே தேசிய தரச்சான்று நிர்ணயக்குழுவால்  தேசிய தரச்சான்றிதழ் பெற்ற முதல் அரசு மருத்துவமனையாகும். இதையடுத்து  மாவட்டம் சோளிங்கர் அரசு மருத்துவமனை இந்த அந்தஸ்து பெற்றுள்ளது. தாலூகா அந்தஸ்துக்கு குறைவான அரசு மருத்துவமனைகளில் தேசிய தரச்சான்று பெற்ற முதல் அரசு மருத்துவமனை சோளிங்கர் மருத்துவமனையாகும்.

 இந்நிலையில், ராசிபுரம், ஸ்ரீரங்கம், அரூர், திருப்பத்தூர், பென்னாகரம் போன்ற 5 தாலுகா தலைமை அரசு மருத்துவமனைகளும் தேசிய தரச்சான்று பெரும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவமனைகள் பட்டியிலில் தற்போது இணைந்துள்ளன. நாள்தோறும் சுமார் 900-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்லும் தாலுகா அந்தஸ்து பெற்ற ராசிபுரம் அரசு மருத்துவமனையில் மொத்தம் 118 படுக்கை வசதிகள் உள்ளன.  இங்கு உட்புற நோயாளிகள் பிரிவு, வெளிப்புற நோயாளிகள் பிரிவு, குழந்தைகள் பிரிவு, மகப்பேறு பிரிவு, தொற்றுநோய் பிரிவு, சித்த மருத்துவப்பிரிவு, ரத்த வங்கி பிரிவு போன்றவை செயல்பட்டு வருகின்றன. இங்கு கண் அறுவை சிகிச்சைக்கான வசதி, பொது அறுவை சிகிச்சை பிரிவு போன்றவை உள்ளன.

 மருத்துவமனையின் பின்புறம் ரூ.10 லட்சம் செலவில் புதியதாக கட்டப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு உள்நோயாளிகளின் பிரிவாக மாற்றம் செய்யப்பட்டு, ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகள் வசதியை கருத்தில் கொண்டு மருத்துவமனையின் முன்பகுதி அவசர சிகிச்சை பிரிவாக மாற்றும் பணியும் நடந்து வருகிறது.

அறுவை சிகிச்சை மருத்துவர் இல்லாததால் அறுவை சிகிச்சை நடைபெறுவதில்லை.

இந்நிலையில், போதிய மருத்துவர்கள் இல்லாதது மருத்துவமனை தரச்சான்று பெறுவதை கேள்விக்குறியாக்கியுள்ளது. மாதம் 60-க்கும் மேற்பட்ட பொது அறுவை சிகிச்சை நடைபெற்று வந்த இந்த மருத்துவமனையில், கடந்த 5 ஆண்டுகளாக அறுவை சிகிச்சை மருத்துவர் நியமிக்கப்படவில்லை. இடையில் நியமிக்கப்பட்ட ஒரு அறுவை சிகிச்சை மருத்துவரும் நீண்டநாள் நீடிக்கவில்லை. இதனால், இங்கு அறுவை சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

மேலும், இருதய நோய் சிறப்பு மருத்துவரும், 3 ஆண்டுகளுக்கு மேலாக இல்லாததால், நெஞ்சுவலி நோயாளிகள், ரத்தஅழுத்தம், விபத்து ஏற்பட்டு தலையில் அடிபட்டு அவசர சிகிச்சைக்கு கொண்டு வரப்படும் நோயாளிகள் பெரும்பாலும், முதலுதவிக்கு சிகிச்சைக்கு பின்னர் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.

செயல்படாத கண் அறுவை சிகிச்சை மையம்: இம்மருத்துவமனையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மக்களவை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பில் அறுவை சிகிச்சை அரங்குடன் கூடிய கண் சிகிச்சை மையம் தொங்கப்பட்டது. ஆனால் கண் மருத்துவர்கள் கடந்த 8 ஆண்டுகளாக இல்லாததால், இந்த கண் சிகிச்சை மையம் கட்டப்பட்டு நோயாளிகளுக்கு பயனற்றுள்ளது. மேலும் குளிரூட்டப்பட்ட பிணவறைக்கு அரசு ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், அதிகாரிகள் தாமதத்தால், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிதி திருப்பி அனுப்பப்பட்டு, குளிரூட்டப்பட்ட பிணவறை அமைவது தடைபட்டுள்ளது.

தரச்சான்று பெற தடை: கடந்த 3 மாதங்களாக தரச்சான்று பெருவதற்கான முயற்சியில் மருத்துவமனை நிர்வாகம் ஈடுபட்டுள்ள நிலையில், அறுவை சிகிச்சை மருத்துவர், இருதய நோய் மருத்துவர், கண் மருத்துவர்கள், ஆண் செவிலியர்கள், துப்புரவாளர்கள், ஆம்புலன்ஸ் ஒட்டுநர் பற்றாக்குறை, பல்வேறு துறைகளுக்கான கட்டடங்கள், போதிய படுக்கை வசதிகள்,  குளிரூட்டப்பட்ட பிணவறை போன்ற வசதிகள் இல்லாமல் இருப்பது தேசிய தரச்சான்று பெற தடையாக உள்ளது.

இது குறித்து, மருத்துவமனை தலைமை மருத்துவர் ஏ.ராஜ்மோகனிடம் கேட்டபோது தரச்சான்று  பெறுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. மருத்துவமனைக்கு தேவையான மருத்துவப் பணியிடங்களை நிரப்ப உயர் அதிகாரிகள் மூலம் அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைக்கு தேவையான புதிய கட்டடங்களுக்கான நிதி ஒதுக்க சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் ஒதுக்கீடு செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளோம். விரைவில் இது கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.  தேசிய தரசான்றிதழ் பெறும் அளவிற்கு மருத்துவமனை வசதிகள் மேம்பாட்டு பணிகள் நடந்து வருவது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியளிப்பினும், நோயாளிகளின் உயிர்காக்கும் மருத்துவர்கள், வசதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பது நகர பொதுமக்கள், மருத்துவமனைக்கு வரும் ஏழை நோயாளிகளின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com