கிருஷ்ணகிரி மாவட்ட அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுமா?

கிருஷ்ணகிரி, மே 31: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில், அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.  க
Updated on
1 min read

கிருஷ்ணகிரி, மே 31: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில், அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

 கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஒசூர் ஆகிய இரண்டு கல்வி மாவட்டங்கள் செயல்படுகின்றன. இதில், கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 93 அரசு உயர்நிலைப் பள்ளிகளும், 51 மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. அதேபோல, ஒசூர் கல்வி மாவட்டத்தில் 79 உயர்நிலைப் பள்ளிகளும், 29 மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இந்தப் பள்ளிகளில் 61,565 மாணவர்கள், 64,542 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஒசூர் கல்வி மாவட்டத்தில் தமிழ் மொழி வழிக் கல்வியோடு, தெலுங்கு, கன்னடம், உருது ஆகிய மொழி வழிக் கல்விகளும் உள்ளன.

 கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தில் 2010-2011-ம் கல்வியாண்டில் 76 சதமாக இருந்த பிளஸ் 2 தேர்ச்சி விகிதம், 2011-2012-ம் கல்வியாண்டில் 76.99 சதமாக உயர்ந்துள்ளது. இருப்பினும், சூளகிரி, வேப்பனப்பள்ளி, மனவாரணப்பள்ளி, நல்லூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 30 சதத்துக்கும் குறைவாகவே பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் உள்ளது. இந்த மாணவர்களில் பெரும்பாலானோர் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் தோல்வி அடைந்துள்ளனர்.

 இங்குள்ள பள்ளிகளில் பாடவாரியாக மொத்தம் 563 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால், இதில் 110 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதேபோல, தமிழ் மொழிப் பாடத்துக்கு 80 ஆசிரியர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால், 50 பணியிடங்களை மட்டுமே மாநில அரசு நிர்ணயித்துள்ளது. அதிலும் 21 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. மேலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் மொத்தமுள்ள 1,473 ஆசிரியர் பணியிடங்களில் 427 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. தெலுங்கு, கன்னடம், உருது ஆகிய மொழிப் பாடங்களுக்கும் போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.

 இதனால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைய வாய்ப்பு உள்ளது. இந்த நிலை ஏற்படாமல் இருக்க போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று பெற்றோர், கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் சுகன்யா கூறியது:

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியடங்களை நிரப்பக் கோரி இணை இயக்குநரிடம் (பணியாளர் தொகுதி) கேட்டுள்ளோம். மேலும், மிகக் குறைந்த அளவு தேர்ச்சி உள்ள பள்ளிகளில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களிடம் கூட்டம் நடத்தி தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார் அவர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com