களிமண் எடுக்க வருவாய்த் துறையினரின் அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக மண்பாண்டத் தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ளது நல்லப்பரம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் 34 குடும்பங்கள் மண்பாண்டங்கள் தயாரிக்கும் தொழிலில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றன. தருமபுரி மாவட்டத்தில் அதியமான்கோட்டை, தருமபுரி, கிருஷ்ணாபுரம் என பல்வேறு பகுதிகளில் மண்பாண்டத் தொழிலாளர்கள் இத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், கால மாற்றத்தால் மண் பாண்டங்களின் தேவை குறைவாலும், அதற்கான மண் கிடைப்பதில் உள்ள சிரமம், அரசு சலுகைகள் கிடைப்பதில் தொய்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இத் தொழிலை விட்டு, தனியார் நிறுவனங்களில் பணிபுரிய ஒசூர், பெங்களூரு என பல்வேறு இடங்களுக்குச் சென்று விட்டனர்.
இந்த நிலையில், நல்லப்பரம்பட்டி கிராமத்தில் உள்ள இந்த 34 குடும்பங்கள் மட்டும் தங்களது பாரம்பரியத் தொழிலை விடாமல் பல்வேறு நெருக்கடிகளுக்கிடையே தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில், மண் அடுப்பு, பல்வேறு அளவிலான பானைகள், விளக்குகள், பூந்தொட்டி, கால்நடைகள் தண்ணீர் அருந்தும் தொட்டி, உண்டியல்கள் உள்ளிட்ட பொருள்களை தயார் செய்து வருகின்றனர்.
இந்த பொருள்களை சேலம் மாவட்டம், மேட்டூர், மேச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்தும், தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக, தமிழ் மாதங்களில் ஐப்பசி, கார்த்திகை, தை பொங்கலையொட்டி மார்கழி மாதம் ஆகிய மூன்று மாதங்களில் அதிக அளவிலான மண்பாண்டப் பொருள்கள் விற்பனையாகின்றன. இந்த மூன்று மாத விற்பனையை எதிர்பார்த்து, ஆண்டு முழுவதும் இத் தொழிலில் தங்களது குடும்பத்தினருடன் ஈடுபட்டு வருகின்றனர்.
மண்பாண்டப் பொருள்களைத் தயாரிக்க முக்கியத் தேவையான மூலப்பொருள் களிமண். ஒரு குடும்பத்துக்கு ஓராண்டுக்கு 5 டிராக்டர் மண் தேவைப்படுகிறது. இந்த மண் நல்லப்பரம்பட்டி அருகேயுள்ள கெம்பன்குட்டை ஏரியில் கிடைக்கிறது.
ஆனால், மண்ணை டிராக்டர் மூலம் எடுத்துவர வருவாய்த் துறையினரின் அனுமதி தேவைப்படுகிறது. கடந்த 2013-ஆம் ஆண்டு வரை இக் கிராமத்தைச் சேர்ந்த 33 குடும்பங்களுக்கு மாவட்ட நிர்வாகம் தனித்தனியே அடையாள அட்டை வழங்கி மண் எடுத்துவர அனுமதி அளித்திருந்தது. ஆனால், அடுத்த 2014 முதல் மண் அள்ள உரிமம் புதுப்பித்துத் தராமல் அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால், தங்களுக்கு தேவையான மண், டிராக்டர் மூலம் எடுத்துவர முடியாமல் தங்களது இரு சக்கர வாகனங்களில் சிறு, சிறு பைகளில் அடைத்து எடுத்து வருகின்றனர். இதனால், இத் தொழிலாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், கெம்பன்குட்டை ஏரியிலிருந்து மண் எடுக்க அனுமதி வேண்டும் என கடந்த மூன்று ஆண்டுகளாக பல முறை
வருவாய்த் துறைக்கு மனு அளித்தும், உரிய அனுமதி கிடைக்காமல், எப்போதும் வரும் எனத் தெரியாமல் காத்துக் கிடக்கின்றனர் மண்பாண்டத் தொழிலாளர்கள்.
இது குறித்து, மண்பாண்டத் தொழிலாளியான ஏ.செந்தில்குமார் கூறியது: நல்லப்பரம்பட்டியில் உள்ள அனைத்து குடும்பங்களும் இத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
தற்போது, மண்பொருள்களைத் தயாரிக்கத் தேவையான களிமண்ணை அருகில் உள்ள ஏரியிலிருந்து எடுத்து வர 2013-ஆம் ஆண்டு முதல் விண்ணப்பித்தும், மனுக்களை அளித்து வருகிறோம். இதுவரை, எங்களுக்கான அனுமதி கிடைக்கவில்லை. ஏற்கெனவே, நலிந்த நிலையில் இத்தொழிலில் போதிய வருவாய் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறோம்.
எனவே, ஏரியிலிருந்து மண் எடுக்க தேவையான அனுமதியை விரைந்து வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பென்னாகரம் வட்டாட்சியர் பி.மாரிமுத்து கூறியது: பென்னாகரம் அருகேயுள்ள நல்லப்பரம்பட்டி கிராமத்தில் 33 குடும்பங்களுக்கும் தற்போது ஏரியிலிருந்து டிராக்டர் மூலம் தலா ஒரு குடும்பத்துக்கு 5 லோடு எடுக்க அனுமதி தயாராக உள்ளது. உடனடியாக அந்தத் தொழிலாளர்கள் அணுகினால் அனுமதி அளிக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.