தருமபுரி மாவட்டத்தில் வாடகைக் கட்டடங்களில் அடிப்படை வசதிகளில்லாமல் இயங்கும் அங்கன்வாடி மையங்களுக்கு சொந்தக் கட்டடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்காக தமிழக அரசு அங்கன்வாடி மையங்களை அமைத்துள்ளது.
இம்மையங்களில், குழந்தைகளுக்கு 6 மாதம் முதல் 36 மாதம் வரை இணை உணவு வழங்கப்படுகிறது. 25-ஆவது மாதம் முதல் 60-ஆவது மாதம் வரை வாரத்தில் திங்கள்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை ஆகிய மூன்று நாள்களில் முட்டையுடன் கூடிய மதிய உணவும் பிற நாள்களில் பாசிப்பருப்பு, மூக்கடலையும் வழங்கப்படுகின்றன.
நண்பகலில் குழந்தைகளுக்கு முன் பருவக் கல்வி அளிக்கப்படுகிறது. குழந்தைகளின் எடை அறிதல், செவிலியர் உதவியுடன் வயிற்றுப் பூச்சி மருந்து வழங்குதல் மற்றும் சிறுநோய்களைக் கண்டறிவது, கருவுற்ற பெண்களைப் பதிவு செய்து இணை உணவு, வளர் இளம் பெண்களுக்கு சத்து மாத்திரை வழங்குவதும் இம்மையங்களின் பணிகள்.
தருமபுரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 1330 அங்கன்வாடி மையங்களில் 196 வாடகைக் கட்டடங்களிலும் 105 இலவசக் கட்டங்களிலும் இயங்குகின்றன. இவற்றில் போதிய கழிப்பறை, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. சில மையங்கள் பழைய பழுதடைந்த கட்டடங்களில் இயங்குகின்றன.
குழந்தைகள் வருகை இல்லை: அடிப்படை வசதிகள் இல்லாத மையங்களுக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் ஆர்வம் காட்டுவதில்லை. பிடமனேரி நெல்லி நகரில் 3-ஆவது தெருவில் உள்ள மையம், வர்த்தகப் பயன்பாட்டிற்கான சிறிய அறையில் செயல்படுகிறது.
இங்கு குழந்தைகள் வருவதில்லையாம். ரங்காபுரம் மையம் பழைய கட்டடத்தில் இயங்குவதால் அவ்வப்போது விடுப்பு அளித்து பூட்டப்படுவதாகக் கூறப்படுகிறது.
காலிப்பணியிடங்கள்: ஒரு மையத்துக்கு பணியாளர் மற்றும் ஒரு உதவியாளர் என இரு பணியிடங்கள் உள்ளன. தருமபுரி மாவட்டத்தில் 144 பணியாளர் இடங்களும், 213 உதவியாளர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளன. தருமபுரி ஒன்றியத்தில் அதிக அளவு காலியிடங்கள் உள்ளதாகத் தெரிகிறது.
குழந்தைகளின் நலன் கருதி, அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி, அடிப்படை வசதிகளுடன் கூடிய சொந்தக் கட்டடம் கட்ட சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் தேன்மொழி கூறியது: தருமபுரி மாவட்டத்தில் 175 மையங்களுக்குப் புதிதாகக் கட்டடம் கட்ட அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இம்மையங்கள் மக்கள் பிரதிநிதிகளின் தொகுதி மேம்பாட்டு நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வப்போது விடுப்பு அளிக்கப்படும் மையங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.