தருமபுரி சட்டப் பேரவை தொகுதி இம் மாவட்டத்தில் தலைநகர் மற்றும் நல்லம்பள்ளி வருவாய் வட்டத்தை உள்ளடக்கியுள்ளது. இத் தொகுதியில் பிரதான கோரிக்கையாக பல ஆண்டுகளாக நீடித்துவருவது வேலைவாய்ப்பு இன்மை. தொழில் வளம் என்பது கனவாகத் தொடர்வதால், படித்த இளைஞர்கள் வேலை தேடி கர்நாடக மாநிலம் பெங்களூரு, திருப்பூர், ஓசூர் உள்ளிட்ட இடங்களுக்கு அலைந்து வருவது காலம், காலமாகத் தொடர்கிறது.
மேலும், ஒகேனக்கல் அருவி நீர் இம் மாவட்டம் வழியாகக் கடந்து சென்றாலும், அவற்றை விவசாயத்துக்குப் பயன்படுத்த முடியாத நிலை. இதனால், நீர்ப் பாசன வசதிகளின்றி விளை நிலங்கள் எல்லாம் வானம் பார்த்த பூமியாக உள்ளது. ஒரு காலத்தில் கரும்பு, நெல், கேழ்வரகு, சிறு தானியங்கள், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடியில் முதன்மையாகத் திகழ்ந்த தருமபுரி, போதிய வேளாண் மேம்பாட்டுத் திட்டங்கள் இன்றி, விவசாயிகள் அண்டை மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் சென்று கூலித் தொழிலாளர்களாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
அறிவிப்போடு நின்றது சிப்காட் தொழில்பேட்டை: தருமபுரி பகுதி மக்கள் வேலை தேடி வெளியூர்களுக்குச் செல்லும் நிலையைத் தவிர்க்க நல்லம்பள்ளி அருகே 1,700 ஏக்கரில் சிப்காட் தொழில்பேட்டை அமைக்கப்படும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், தொழில்சாலைகள் அமைக்கப் போதிய நடவடிக்கை இல்லாததால், அறிவிப்போடு நின்றது அத் திட்டம். இதனால் குடிபெயர்வு தொடர்கிறது.
தருமபுரி பகுதியில் மலர் சாகுபடி செய்யும் விவசாயிகள், அதனை பெங்களூருக்குக் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதில் அங்கு செல்ல தாமதம் ஏற்பட்டால், பூக்கள் தரம் குறைந்து வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க மலர்கள், காய்கறிகள் பதப்படுத்தும் வகையில் குளிர்பதனக் கிடங்கை அரசு அமைக்க வேண்டும். அதியமான்கோட்டையில் அறிவியல் மையம் சார்பில் துணைக் கோளரங்கம் அமைக்கப்படும் என அறிவித்தது நடைமுறைக்கு வரவில்லை என்கிறார் நல்லம்பள்ளியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஏ.சரவணன்.
விளைநிலங்கள் சேதமடைவதைத் தடுக்க நடவடிக்கை இல்லை: தருமபுரி பகுதி பெரும்பாலும் வனப் பகுதிகளை ஒட்டியுள்ளது. இங்கிருந்து வெளியேறும் காட்டுப் பன்றிகள் கிராமப்புறங்களில் உள்ள விளை நிலங்களில் புகுந்து அவற்றைச் சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை. கிராமப்புறங்களில் உடல்நலம் பாதிக்கப்பட்டால் சிகிச்சை பெறுவதற்கு போதிய வசதிகள் இல்லை. அதேபோல, குக்கிராமங்களுக்குச் செல்லும் தார்ச்சாலைகள் தரமானவையாக இல்லை. மேலும், சில கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தரப்படவில்லை. வருவாய் வட்டமாக அறிவிக்கப்பட்ட நல்லம்பள்ளியில் இதுவரை பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதற்கான நடவடிக்கைகளை வரப்போகும் அரசு எடுக்க வேண்டும் என்கிறார் பாலஜங்கமனஅள்ளியைச் சேர்ந்த தொண்டு நிறுவன ஊழியர் ஜி.கவிதா.
பாதுகாக்கப்பட்ட குடிநீர்: தருமபுரி நிலத்தடி நீரில் அளவுக்கதிகமான புளோரைடு இருப்பதால், எலும்பு, பல், தோல் சம்பந்தப்பட்ட பாதிப்புக்குள்ளாகி வந்தனர் தருமபுரி பகுதியினர். இதனைத் தடுக்க சுமார் ரூ.2 கோடியில் கொண்டு வந்த ஒகேனக்கல் குடிநீர், புளோரைடு நோய் குறைப்புத் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. மேலும், திட்டத்தின் நோக்கம் மறந்து, பல இடங்களில் நிலத்தடி நீருடன் கலந்து இந்தக் குடிநீர் வழங்கப்படுகிறது. இதனை முறைப்படுத்த வேண்டும் என்கின்றனர் இப் பகுதி பொதுமக்கள்.
நீர்ப்பாசனம்: தருமபுரி பகுதியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆட்சியில் நாகாவதி அணை, தொப்பையாறு அணை ஆகியவை கட்டப்பட்டன. ஆனால், அவரைத் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் நீர்ப்பாசனத்துக்கு போதிய முக்கியத்துவம் தரவில்லை. மேலும், தற்போது பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 74 ஏரிகளையும் பல ஆண்டுகளாக முறையாக தூர்வாராமல், கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழை நீரைத் தேக்கிவைக்க முடியவில்லை. இனி அமையுள்ள அரசு இதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பு கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
நீர்நிலைகளை ஆக்கிரமித்த குப்பைக் கிடங்கு: தருமபுரி நகராட்சியில் உள்ள வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தடங்கம் அருகேயுள்ள பகுதியில் நகராட்சி சார்பில கிடங்கு அமைக்கப்பட்டு கொட்டப்படுகிறது. இந்த இடம் நீர்வழித்தடம் என்பதாலும், அருகாமையில் குடியுருப்பு பகுதிகள் உள்ளதாலும், இக் கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 4 ஆண்டுகளாக அப் பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.