கனவாகவே நீடிக்கிறது கூட்டுறவு "சேகோ' தொழிற்சாலை!

மரவள்ளிக் கிழங்கு சாகுபடி அதிகமாக நடைபெற்றுவரும் அரூர் சட்டப்பேரவைத் தொகுதியில், அரசு சார்பில் கூட்டுறவு சேகோ தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்ற நீண்ட காலக் கோரிக்கை தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

மரவள்ளிக் கிழங்கு சாகுபடி அதிகமாக நடைபெற்றுவரும் அரூர் சட்டப்பேரவைத் தொகுதியில், அரசு சார்பில் கூட்டுறவு சேகோ தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்ற நீண்ட காலக் கோரிக்கை தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

சமூக, பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய வரிசையில் இருக்கும் தருமபுரி மாவட்டத்தில், அதிலும் பின்தங்கிய நிலையில் இருப்பது அரூர் சட்டப்பேரவைத் தொகுதி. விவசாயமே பிரதான தொழிலான இங்கு, மரவள்ளி சாகுபடி அதிகம்.

தருமபுரி மட்டுமல்லாது அருகே கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி நடைபெற்று வருகிறது. ஆனால், எங்கும் மரவள்ளி அரைவைக்கென அரசு ஆலை இல்லை.

தனியார் ஆலைகளுக்கும் விவசாயிகளுக்கும் விலை முரண்பாடு வரும்போது மட்டும் அதனைத் தீர்க்கும் முத்தரப்புக் குழு மட்டும் அரசால் அமைக்கப்பட்டிருக்கிறது.

மரவள்ளியின் தழைகள், கிழங்கின் தோல் மற்றும் திப்பிகள் கால்நடைகளுக்கு நல்ல உணவாகப் பயன்படுகிறது. வறட்சியைத் தாங்கக்கூடியதும், குறைவான தண்ணீர் இருந்தால் கூட எளிதாக பயிரிடக்கூடிய வகையில் மரவள்ளி இருப்பதால், இதனைப் பயிரிட விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

தொடர் மழைக் காலங்களில் மரவள்ளிக் கிழங்குகள் அழுகிவிடுகின்றன. தட்டுப்பாட்டின்போது மூட்டை ரூ. 900 வரை விலைபோகும் மரவள்ளிக் கிழங்கு, மழைக் காலங்களில் ரூ. 100-க்குக்கூட விலை போவதில்லை.

இந்தப் பின்னணியில்தான், ஏன் அரூரில் கூட்டுறவு "சேகோ' தொழிற்சாலையை அமைக்கக் கூடாது? என்ற கேள்வியோடு, கடந்த 10 ஆண்டுகளாக இந்தத் தொகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

அரசு இதற்கான அடிப்படைப் பணிகளைத் தொடங்கியுள்ளது என அறிவித்து பல மாதங்களாகியும் உருப்படியான முன்னேற்றம் இல்லை என்கிறார்கள் விவசாயிகள்.

""மரவள்ளி சாகுபடி செய்யும் விவசாயிகள் கட்டுப்படியில்லாத விலையால் தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்து வருகின்றனர். மானாவாரி பயிர்களையும், விவசாயத்தையே நம்பியுள்ள நடுத்தர மக்கள், விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில், கூட்டுறவு சர்க்கரை ஆலை போலவே, கூட்டுறவு சேகோ தொழிற்சாலையைத் தொடங்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் செல்லம்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஜி. திருமால்செல்வன்.

நீர்ப் பாசனத் திட்டங்கள்: அரூர் தொகுதியில் முன்னாள் முதல்வர்கள் காமராஜர், எம்ஜிஆர் ஆட்சிகளுக்குப் பிறகு நீர்ப் பாசனத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. வள்ளிமதுரையில் சிறிய அளவிலான நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கத்தால் விவசாயிகளுக்கு அதிகப்படியான பலன்கள் ஏதுமில்லை.

அரூர் தொகுதியில் கல்லாறு, வரட்டாறு, வாணியாறு, தென்பெண்ணை ஆறுகள் ஓடுகின்றன. ஆனால், தொடர் மழைக்காலங்களில்கூட மொரப்பூர் பகுதியில் ஏரிகள், குளம், குட்டைகள் நிரம்புவதில்லை.

நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்ததால், தற்போது மொரப்பூர் பகுதியில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்ப் பாசனத் திட்டங்களைத் தீட்டி முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை என்கின்றனர் விவசாயிகள்.

"தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள மதிக்கெட்டான் தடுப்பணையைச் சீரமைத்து தாமலேரிப்பட்டி, கீழ்மொரப்பூர், பறையப்பட்டி, நெருப்பாண்டகுப்பம், தாமரைக்கோழியம்பட்டி, வடுகப்பட்டி, வேப்பநத்தம், கொங்கவேம்பு, கருத்தம்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதியில் கால்வாய்கள் அமைக்க வேண்டும்.

கே. ஈச்சம்பாடி பாசனக் கால்வாயை மருதிப்பட்டி வரையிலும் நீட்டிப்புச் செய்ய வேண்டும். கல்லாறு, வரட்டாறு, வாணியாறு, தென்பெண்ணை ஆறுகளில் சுமார் 3 கிலோ மீட்டருக்கு ஓர் இடத்தில் தடுப்பணைகளை அமைக்க வேண்டும். கோட்டப்பட்டி கல்லாற்றில் புதிய அணை கட்ட வேண்டும். கிருஷ்ணகிரி கேஆர்பி அணையின் கால்வாயை மொரப்பூர் வரையில் நீட்டிக்க வேண்டும்.

அரூர் தொகுதியில் நீர் ஆதாரங்களைப் பெருக்கவும், விவசாயத்தை மேம்படுத்தவும் தமிழகத்தில் ஆட்சிக்குவரும் புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்கிறார் எச். ஈச்சம்பாடியைச் சேர்ந்த விவசாயி ஏ. மகாகாந்தன்.

மாலிப்டினம் தொழிற்சாலை: எப்போதும் தேர்தல் வாக்குறுதியாகவே இருந்துவரும் இன்னொரு முக்கியமான அம்சம், மாலிப்டினம் தொழிற்சாலை. அரூர் பகுதியில் சுமார் 24 கி.மீ. ஆழத்தில் இந்த அரிய தாதுப்பொருள் இருப்பதாக 1970-களிலேயே கண்டுபிடித்து அப்போதிருந்தே ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தத் தொழிற்சாலை தொடங்கப்பட்டால், கோலார் தங்கவயலுக்கு இணையாக அரூர் தொகுதியில் ஒரு வளம் கொழிக்கும் தொழிற்சாலையும், சுமார் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்கிறார்கள் அரூர் தொகுதி மக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com