ஒகேனக்கல்ல் உயிர் காக்கும் உடைக்கு தட்டுப்பாடு: பரிசல் சவாரிக்கு நீண்ட நேரம் காத்திருக்கும் சுற்றுலாப் பயணிகள்! 

ஒகேனக்கல்லில் பரிசல் சவாரிக்குச் செல்ல உயிர் காக்கும் உடை (லைப் ஜாக்கெட்) தட்டுப்பாட்டால் நீண்ட நேரம் சுற்றுலாப் பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 
Updated on
2 min read

ஒகேனக்கல்லில் பரிசல் சவாரிக்குச் செல்ல உயிர் காக்கும் உடை (லைப் ஜாக்கெட்) தட்டுப்பாட்டால் நீண்ட நேரம் சுற்றுலாப் பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ளது ஒகேனக்கல் சுற்றுலாத் தலம். கர்நாடக மாநிலத்தைக் கடந்து காவிரி ஆறு இங்கு அருவிகளாக ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. பிரதான அருவி, ஐந்தருவி, சினி அருவி என இங்குள்ள அருவிகளில் தண்ணீர், பாறைகளில் புகைப்போல மேலெழுந்து கொட்டு அழகை காண சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கில் வருகின்றனர்.
 விடுமுறை நாள்களில் ஒகேனக்கல்லுக்கு வருவோரின் எண்ணிக்கை 50,000-ஐ கடக்கும். அவ்வாறு வருவோர் பிரதான அருவிகளில் குளித்து குடும்பத்துடன் பரிசலில் சென்று அருவிகளைச் சுற்றிப்பார்க்க பரிசல் துறைக்கு வருகின்றனர்.
 உயிர் காக்கும் உடை தட்டுப்பாடு: ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல 400-க்கும் மேற்பட்ட பரிசல்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நிகழ்ந்த பரிசல் விபத்துக்குப் பிறகு, பரிசல் ஓட்டிகளுக்கு, தருமபுரி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.
 இந்த வகையில், ஒரு பரிசலில் நால்வரை மட்டுமே அழைத்துச் செல்ல வேண்டும். உயிர் காக்கும் உடையின்றி யாரையும் அழைத்துச் செல்லக் கூடாது. ஒரே நேரத்தில் பல பரிசல்களை இணைத்து அருவிக்கு அனுப்ப வேண்டும் உள்ளிட்டவை இந்த நிபந்தனைகளில் அடங்கும். நான்கு நபர்களை பரிசலில் அழைத்துச் செல்ல ரூ.750 கட்டணமாகப் பெறப்படுகிறது. இதில் ரூ.150 பராமரிப்பு மற்றும் நுழைவுக் கட்டணம் என பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டு, மீதமுள்ள ரூ. 600 பரிசல் ஓட்டிகளுக்கு வழங்கப்படுகிறது.
 இந்த நிலையில், ஒகேனக்கல் அருவியில் பரிசல் சவாரிக்கு சுமார் 1,500 உயிர் காக்கும் உடை தேவைப்படுப்படும் எனக் கூறப்படுகிறது. தற்போது 500 உயிர் காக்கும் உடைகள் மட்டுமே உள்ளதாகக் கூறப்படுகிறது. இதிலும், பல உடைகள் பழுதாக உள்ளது எனக் கூறி 250 உயிர் காக்கும் உடைகள் மட்டுமே சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. இதனால், விடுமுறை நாள்களில் பரிசல் சவாரிக்காக வருகிற பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இதனால், பல நேரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கும் பரிசல்துறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணியாளர்களுக்கும் வாக்குவாதம் நிகழ்வது தொடர்கிறது.
 ஒகேனக்கல் அருவிக்கு குளிக்கவும், பரிசல் சவாரி செல்வதற்காகவும் பெரும்பாலான பயணிகள் வருகின்றனர். இதில் பரிசலில் சவாரி செய்ய ஒரு முறைக்கு 75 பரிசல்கள் மட்டுமே அனுப்பப்படுகின்றன. இங்கு போதுமான உயிர் காக்கும் உடைகள் இல்லை. இதனால், சவாரி சென்ற பரிசல்கள் திரும்பி வந்த பின்னர், உடைகளைப் பெற்று கரையில் காத்திருக்கும் பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன. இதற்காக டிக்கெட் பெற்றுக்கொண்டு சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. எனவே, குறித்த நேரத்தில் ஊர் திரும்ப முடிவதில்லை. இதனால், சில நேரங்களில் ஏராளமான பயணிகள் பரிசல் சவாரி செய்யாமலேயே திரும்புகின்றனர். எனவே, உயிர் காக்கும் உடைகள் தட்டுபாடின்றி வழங்கி, பயணிகளைக் காத்திருக்கச் செய்யாமல் பரிசல் சவாரிக்கு அனுப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 - சுற்றுலாப் பயணி செல்வம்
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com