சித்தேரி மலையில் முழுமையான அரசு மருத்துவமனை அமைக்கப்படுமா?

ஏறத்தாழ 62 மலைக்கிராமங்களைக் கொண்ட சித்தேரி மலையில், தற்போதுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி
Published on
Updated on
1 min read

ஏறத்தாழ 62 மலைக்கிராமங்களைக் கொண்ட சித்தேரி மலையில், தற்போதுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி முழு நேர அரசு மருத்துவமனையாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்களால் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3 ஆயிரம் அடி உயரம் கொண்டது சித்தேரி மலை. மாவட்டத்தின் பெரிய மலை இது. பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்குள்பட்டது என்றாலும், 30 கிமீ தொலைவிலுள்ள அரூர்தான் இவர்களுக்கு 'அருகமை நகரம்'. இங்கு சித்தேரி ஊராட்சிக்குள்பட்ட கீழநொச்சிக்குட்டை, ஜக்கம்பட்டி, அழகூர், மண்ணூர், மூலேரிக்காடு, செக்கிழுத்தாம்பூர், கல்நாடு, எருமைகடை, சூரியக்கடை, மாங்கடை, தோல்தூக்கி, ஊமத்தி, கல்நாடு, குண்டல்மடுவு, சேலூர், அம்மாபாளையம் உள்ளிட்ட 62 மலைக்கிராமங்கள் உள்ளன. 
இவற்றில், அரசநத்தம், கலசபாடி உள்பட சுமார் 20 கிராமங்கள் தார்ச்சாலை வசதியில்லாமல் உள்ளன. ஓரிரு கிராமங்கள் இன்னமும் ஒற்றையடிப் பாதையாகவே உள்ளன. மொத்தம் ஏறத்தாழ 12 ஆயிரம் பொதுமக்கள் வசிக்கின்றனர்.
இந்த நிலையில், கடந்த 1981ஆம் ஆண்டில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சித்தேரியில் உள்ளது. மருத்துவர், செவிலியர்களுக்கான குடியிருப்புகளும் கட்டப்பட்டுள்ளன. இப்போது அவை மிகவும் மோசமாக பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றன. கதவுகள் முற்றிலும் உடைந்திருக்கின்றன.
குடிநீருக்காக அமைக்கப்பட்ட தொட்டியும்கூட முற்றிலும் சிதைந்து பயனின்றி காணப்படுகிறது. சுகாதார நிலையக் கட்டடமும் பல இடங்களில் உடைந்திருக்கிறது. ஒரேயோரு புதிய கட்டடம் மட்டும் பின்புறத்தில் உள்ளது.
குடியிருப்புகள் உடைந்திருப்பதால் மருத்துவர்கள் இங்கே தங்குவதில்லை என்கின்றனர் சித்தேரி மக்கள். பெரும்பாலும் செவிலியர்கள்தான் முழுப் பொறுப்பையும் கவனித்துக் கொள்கிறார்கள்.தருமபுரி மருத்துவமனையில் இருந்து சேலத்துக்கு மேல் சிகிச்சைக்காகப் பரிந்துரை செய்யும்போது ஏறத்தாழ இரு நாள்கள் கடந்துவிடுகின்றன என வேதனை தெரிவிக்கின்றனர் அப் பகுதி மக்கள்.
எனவே, சித்தேரி மலைக்கென பிரத்யேகமான அரசு மருத்துவமனையை இங்கே கட்டுவதைத் தவிர வேறு வழியில்லை. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான குடியிருப்புகளைத் தரமானதாகக் கட்டி, அறுவைச் சிகிச்சை அரங்கு உள்ளிட்டவற்றுடன் இந்த மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும்.
வழக்கமாக மக்கள்தொகையைக் காரணம் காட்டி ஒதுக்கிவிடாமல், 62 கிராமங்களைக் கொண்ட மலைப்பகுதி என்பதை மாவட்ட நிர்வாகம் சிறப்பு நேர்வாக அரசுக்கு எழுதி அனுமதி பெற்று தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com