சிவாடியில் எரிபொருள் சேமிப்புக் கிடங்கு: நிலம் கையகப்படுத்த ஆட்சேபணை தெரிவித்து பொதுமக்கள் மனு அளிப்பு

தருமபுரி அருகே சிவாடியில் எரிபொருள் சேமிப்புக் கிடங்கு அமைக்க நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து
Updated on
1 min read

தருமபுரி அருகே சிவாடியில் எரிபொருள் சேமிப்புக் கிடங்கு அமைக்க நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆட்சேபணை மனுக்களை அளித்து வருகின்றனர்.
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் சார்பில், ஆந்திர மாநிலம், விஜயவாடாவிலிருந்து தமிழகத்தில், தருமபுரி அருகே சிவாடியில் எரிபொருள் சேமிப்புக் கிடங்கு அமைக்கப்பட உள்ளது. ஆந்திர மாநிலத்தில், ஏற்கெனவே உள்ள குழாய் வழித்தடத்தை நீட்டிப்புச் செய்து, அங்கிருந்து தருமபுரி அருகே சிவாடியில் அமைக்கப்பட உள்ள இரண்டு சேமிப்புக் கிடங்குகளில் எரிபொருள் சேமிக்கப்பட உள்ளது. மேலும், இங்கிருந்து தமிழகம் மற்றும் கர்நாடகத்திற்கு எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என அந் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
சிவாடி கிராமத்தில் ரயில் பாதை மற்றும் வனப்பகுதியையொட்டி சுமார் 113 ஏக்கரில் இந்தக் கிடங்கு இரண்டு அலகுகளாக அமைக்கப்பட உள்ளது. மேலும், தருமபுரி ரயில் நிலையத்திலிருந்து மிக அருகிலும், சிவாடி ரயில் நிலையத்திற்கு ஒரு கி.மீ .தொலைவு, சேலம் விமான நிலையத்திற்கு 29 கி.மீ தொலைவும், தேசிய நெடுஞ்சாலை எண்-7 ஒட்டி என பல்வேறு வசதிகளோடு இந்த பகுதி அமைந்துள்ளதாக அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதற்கான அறிவிப்பு வந்த தொடக்கத்திலேயே அக் கிராம மக்கள் அனைவரும், எரிபொருள் சேமிப்புக் கிடங்கு அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரளாக வந்து மனு அளித்தனர்.
இருப்பினும்,  இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் தொடர்ந்து சிவாடியில் சேமிப்புக் கிடங்கு அமைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக தருமபுரி ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் தனது அலுவலகத்தை அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது. அதேபோல, எரிபொருள் சேமிப்புக் கிடங்குக்கு நிலம் எடுப்பது தொடர்பான ஆட்சேபணை இருப்பின் தெரிவிக்கலாம் என அண்மையில் நாளிதழ்களில் அறிவிப்பு விளம்பரம் வெளியானது. இப் பணிக்காக தருமபுரி மாவட்ட நிர்வாகம் தனி வட்டாட்சியரையும் நியமனம் செய்தது.  இதைத் தொடர்ந்து, கடந்த திங்கள்கிழமை முதல் நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு, தனி வட்டாட்சியர் பொதுமக்களிடம் ஆட்சேபணை மனுக்களைப் பெற்று வருகிறார். இந்த மனுக்கள் இம் மாதம் இறுதிவரை அனைத்து வேலை நாள்களிலும் பெறப்பட உள்ளது. 
சிவாடியில் எரிபொருள் சேமிப்புக் கிடங்குக்கான நிலம் எடுக்க உள்ள இடம் சுமார் 96 பட்டாதாரர்களுக்குச் சொந்தமானதாகும். இதில் இதுவரை 96 பேர், இத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து தங்களது ஆட்சேபணை மனுக்களை அளித்துள்ளனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய தலித் மற்றும் பிற்பட்டோருக்கு சொந்தமான இந்த நிலம் மட்டுமே தங்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.  எனவே, இந்த நிலத்தை நாங்கள் எரிபொருள் சேமிப்புக் கிடங்கு அமைக்க வழங்கமாட்டோம் என அப் பகுதி மக்கள் தங்களது ஆட்சேபணையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com