பில்பருத்தி காப்புக் காட்டில் புள்ளி மானை வேட்டையாடிய சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை வனத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய 4 பேரை தேடி வருகின்றனர்.
தருமபுரி வனக் கோட்டம், வன அலுவலர் க.ராஜ்குமார் உத்தரவின் பேரில், மொரப்பூர் வனச்சரக அலுவலர் தீ.கிருஷ்ணன் தலைமையில் வனவர்கள் சி.வேடியப்பன், கோவிந்தராஜன் மற்றும் வனக் காப்பாளர்கள் சிவன், வேடியப்பன், ராசாமணி, ஓட்டுநர் பாண்டியன் ஆகியோர் பில்பருத்தி காப்புக் காட்டில் உள்ள வாசிக்கவுண்டனூர் பச்சையம்மன் கோயில் அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, இருசக்கர வாகனங்களில் வந்த நபர்களை நிற்கும்படி சைகை காட்டினர். ஆனால், அவர்கள் நிற்காமல் சென்றதால், அவர்களை துரத்தி சென்றதில் இருசக்கர வாகனத்துடன் ஒருவர் பிடிபட்டார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் சேலம் மாவட்டம், ஏற்காடு அருகே உள்ள கே.புதூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் (எ) மகேந்திரன் (36) என தெரியவந்தது. இவர், ஒரு குழுவுடன் புள்ளி மான் வேட்டைக்கு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, வேட்டைக்கு பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கி, வாகனம், சுட்டுக் கொல்லப்பட்ட புள்ளி மானின் உடல் ஆகியவற்றை அவரிடமிருந்து கைப்பற்றினர். இதுகுறித்து வனத் துறையினர் வழக்குப் பதிந்து, கைது செய்யப்பட்ட லட்சுமணனை பாப்பிரெட்டிப்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், தப்பியோடிய சேலம் மாவட்டம், ஏற்காடு அருகே உள்ள வெள்ளக்காடு கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், பொன்னாட்சி, சேட்டுக்காடு கிராமத்தைச் சேர்ந்த வி.லோகநாதன், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வாசிகவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி ஆகியோரை வனத் துறையினர் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.