திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒகேனக்கல் குடிநீர் முழுமையாக வழங்கப்படும்: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
By DIN | Published On : 11th April 2019 09:38 AM | Last Updated : 11th April 2019 09:38 AM | அ+அ அ- |

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து கிராமங்களுக்கும் முழுமையாக ஒகேனக்கல் குடிநீர் வழங்கப்படும் என்றார் மு.க.ஸ்டாலின்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.என்.வி.எஸ். செந்தில்குமார் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைக்கான இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ. மணி ஆகியோரை ஆதரித்து, தருமபுரி அருகே நடுப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசியது:
தமிழகத்தில் 5 முறை திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தார். தமிழக மக்களுக்கு பல சாதனை திட்டங்களை அவர் செயல்படுத்தினார். திமுக ஆட்சியில், நான் துணை முதல்வராக இருந்தபோது, தருமபுரி மக்கள், புளோரைடு கலந்த நீரைப் பருகி சிரமப்பட்டு வந்ததை அறிந்தேன்.
எனவே, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்காக ஜப்பான் நாட்டுக்குச் சென்று நிதி பெற்று வந்தேன்.
திமுக ஆட்சியில் இத் திட்டத்தில் 80 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டன. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அதிமுக அரசு அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால், கருணாநிதிக்கு பெருமை கிடைத்துவிடும் என்பதால், அதனைக் கிடப்பில் போட்டனர்.
இதனால் மக்களைத் திரட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டேன். அதன்பின்னர், தமிழக அரசால் காணொலிக் காட்சி வழியாக இத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இருப்பினும், இத் திட்டத்தில் சுமார் 20 சதவீதப் பணிகள் நிறைவேற்றப்படவில்லை. பல கிராமங்களுக்குக் குடிநீர் கிடைக்காமல் உள்ளது.
விரைவில் திமுக ஆட்சி அமையும். அப்போது, மீதமுள்ள கிராமங்கள் அனைத்துக்கும் ஒகேனக்கல் குடிநீர் முழுமையாக வழங்கப்படும். மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளால் இந்த நாட்டுக்கு நோய் ஏற்பட்டுள்ளது. இந்த நோயைக் குணப்படுத்த வேண்டுமெனில், இந்த இரண்டு ஆட்சிகளுக்கும் முடிவு கட்ட வேண்டும். இவ்விரு ஆட்சிகளையும் அப்புறப்படுத்தும் வாய்ப்பு தற்போது நமக்குக் கிடைத்துள்ளது.
இதை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தப் பகுதியில் எட்டு வழிச் சாலைத் திட்டம் ரூ. 10 ஆயிரம் கோடியில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இத் திட்டத்துக்காக விளை நிலங்கள், விவசாயிகளைத் துன்புறுத்தி கையகப்படுத்தப்பட்டன. வளர்சிக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. ஆனால், இத் திட்டம் தொடர்பாக விவசாயிகளிடம் பேச வேண்டும் என்று பேரவையில் நான் வலியுறுத்தினேன்.
ஆனால், தமிழக அரசு அதைச் செய்யவில்லை. அதே நேரத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள ஒரு கட்சி, இது குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. தற்போது இத் திட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பாக மேல்முறையீடு செய்வோம் என்கிறார்.
நான் பிரசாரக் கூட்டங்களில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாகவும், கொடநாடு மற்றும் பொள்ளாச்சி விவகாரம் குறித்தும் கேள்வி எழுப்பி வருகிறேன்.
இந்த மூன்று கேள்விகளுக்கும் இதுவரை முதல்வரிடம் இருந்து பதில் வரவில்லை. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இதற்கு உரிய விடை காண்போம் என்றார்.
அரூரில்...
ராமியனஹள்ளி, மொரப்பூர்-கல்லாவி கூட்டுச் சாலை, கம்பைநல்லூர் ஆகிய இடங்களில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்து பேசியதாவது:
எட்டு வழிச் சாலைத் திட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக எட்டுவழிச்சாலை திட்டம் குறித்து தெளிவுபடுத்தவில்லை.
அரூர் சட்டப் பேரவைத் தொகுதியில் சிப்காட் தொழில்பேட்டை அமைக்கப்படும். கே. ஈச்சம்பாடி அணைக் கட்டிலிருந்து வெளியேறும் உபரிநீரை மொரப்பூர் பகுதியிலுள்ள ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என பிரசாரம் செய்தார்.