முறைகேடாக குடிநீர் எடுக்க பயன்படுத்திய 6 மின் மோட்டார்கள் பறிமுதல்
By DIN | Published On : 12th April 2019 08:56 AM | Last Updated : 12th April 2019 08:56 AM | அ+அ அ- |

தருமபுரி அருகே அன்னசாகரத்தில் முறைகேடாக குடிநீர் எடுக்க பயன்படுத்திய 6 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தருமபுரி நகராட்சிக்குள்பட்ட அன்னசாகரத்தில், தீத்தி அப்பாவு தெரு, தண்டுபாதை தெரு, தோப்பு தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு தருமபுரி நகராட்சி நிர்வாகம், ஒகேனக்கல் குடிநீரை இரண்டு நாள்களுக்கு ஒரு முறை விநியோகம் செய்து வருகிறது.
இந்த நிலையில், நகராட்சி நிர்வாகம் குடியிருப்புகளுக்கு வழங்கும் குடிநீரை சிலர் மின்மோட்டார் வைத்து எடுப்பதால், பல பகுதிகளுக்கு குடிநீர் கிடைப்பதில்லை என புகார்கள் வந்தன.
இதையடுத்து, நகராட்சி பொறியாளர் கிருஷ்ணகுமார் மற்றும் அலுவலர்கள் வியாழக்கிழமை அன்னசாகரத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில், முறைகேடாக விதிகளை மீறி, மின் மோட்டார் மூலம் குடிநீர் எடுப்பது தெரியவந்தது. இதையடுத்து விதிகளை மீறி தண்ணீர் எடுக்க பயன்படுத்திய 6 மின் மோட்டார்களை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.