பென்னாகரம் பகுதியில் உழவுப் பணி மும்முரம்
By DIN | Published On : 26th April 2019 03:02 AM | Last Updated : 26th April 2019 03:02 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பெய்த பலத்த மழையால், பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களின் விளைநிலங்களில் உழவுப் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் பருவ மழை பொய்த்த நிலையில், பல்வேறு பகுதிகள் வறட்சி நிலவி வந்தது. தருமபுரி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
இந்நிலையில், பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஏரியூர், தாசம்பட்டி, கூத்தபாடி, பெரும்பாலை, நாகமரை, சின்னம்பள்ளி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதியில் பலத்த மழை பெய்ததால், பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் மற்றும் விவசாயக் கிணறுகளில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து, பென்னாகரம் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களின் விளைநிலங்களில் உழவுப் பணியினை மேற்கொண்டு கம்பு, சோளம், சாமை மற்றும் நிலக்கடலை போன்ற பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மோட்டுப்பட்டியைச் சேர்ந்த விவசாயி கூறுகையில், தருமபுரி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவியதால், நீர் நிலைகள் வற்றி நிலத்தடி நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது.
பென்னாகரம் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால், நீர்நிலைகளில் சற்று தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விளைநிலங்களானது ஈரப்பதத்துடன் காணப்படுவதால் தற்போது உழுது வருகிறோம். இப்பருவத்தில் சோளம், கம்பு மற்றும் சாமை போன்ற பயிர்களை பயிரிட்டு வருகிறோம் என்றார்.