மந்தகதியில் சாலை விரிவாக்கப் பணி
By DIN | Published On : 26th April 2019 03:02 AM | Last Updated : 26th April 2019 03:02 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே பந்தாரஅள்ளியில் மந்தகதியில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சப்பாணிப்பட்டி புறவழிச் சாலையிலிருந்து பிரிந்து, தட்ரஅள்ளி கூட்டுச்சாலை வழியாக பண்ணந்தூர், பந்தாரஅள்ளி வழியாக காரிமங்கலத்தை இணைக்கும் சாலையை விரிவாக்கம் செய்யும் பணி அண்மையில் தொடங்கியது. சுமார் 3 மீட்டர் அகலம் இருந்த இச்சாலையை 5 மீட்டர் அகலமாக சுமார் 12 கி.மீ. தொலைவுக்கு விரிவாக்கம் செய்யும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.
இதில், பந்தாரஅள்ளி ஏரிக்கரையை அகலப்படுத்தி ஏரிக்கோடியில் பாலம் கட்டும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் இப் பணியில், சுமார் 10 கி.மீ. தொலைவுக்கான பணிகள் மட்டும் நிறைவு பெற்றுள்ளன. இருப்பினும், பந்தாரஅள்ளி கிராமத்தில் மட்டும் விரிவாக்கப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டு, சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு விரிவாக்கத்துக்காக குழிதோண்டி ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது. அதேபோல, அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாலம் அமைக்கும் பணியும் தொய்வாக நடைபெற்று வருகிறது. மேலும், விரிவாக்கம் செய்யப்பட்ட இடங்களில் மின் கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளன.
இதனால், இச்சாலையில் பயணிக்கும் நான்கு சக்கர, இருசக்கர வாகனங்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றன. மேலும், இரவு நேரங்களில் விரிவாக்கம் செய்யப்பட்ட இடங்களில் அகற்றப்படாமல் உள்ள மின் கம்பங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகும் சூழல் நிலவிவருகிறது.
எனவே, விபத்துகளைத் தவிர்க்க, வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலை விரிவாக்கப் பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.