ஐயப்ப பக்தர்கள்,இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 04th January 2019 08:24 AM | Last Updated : 04th January 2019 08:24 AM | அ+அ அ- |

சபரிமலையில் பெண்களை வழிபட அனுமதித்ததைக் கண்டித்து, தருமபுரியில் வியாழக்கிழமை ஐயப்ப பக்தர்கள் பேரவை மற்றும் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐயப்ப பக்தர்கள் நிறுவனத் தலைவர் முனுசாமி, இந்து முன்னணி மாவட்டத் தலைவர் சுப்பிரமணி ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்எஸ்எஸ் மாவட்டத் தலைவர் சந்திரசேகரன், வழக்குரைஞர்கள் ரமேஷ் வர்மா, ஜெயபிரகாஷ், பாஜக மாவட்ட பொதுச் செயலர் அனந்த கிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. அ.பாஸ்கர் உள்ளிட்டோர் பேசினர்.
இதில், சபரிமலையில் 50 வயதுக்குள்பட்ட பெண்கள் இருவரை வழிபட அனுமதித்த கேரள மாநில அரசைக் கண்டித்தும், இனி வருங்காலங்களில் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஊத்தங்கரையில்... ஊத்தங்கரையில் நான்கு முனை சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இந்து மக்கள் கட்சி கோட்டப் பொறுப்பாளர் அசோக் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் குப்தா, செய்தி தொடர்பாளர் இறையருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
ஒசூரில்... ஒசூர் ராம் நகரில் நடைபெற்ற போராட்டத்தில், பாஜக மாநில பொதுச் செயலர் கே.எஸ்.நரேந்திரன், கோட்டப் பொறுப்பாளர் ஜி.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலர் எம்.நாகராஜ், மாவட்டச் செயலர் வரதராஜன், ராஜு, மாவட்டத் தலைவர் முனிராஜ், மாவட்ட பொதுச் செயலர் சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், கேரள முதல்வரையும், கேரள அரசைக் கண்டித்தும் முழக்கமிட்டனர்.