தருமபுரி மாவட்ட அலக்கட்டு அடர்வன கிராமத்துக்கு 10 கி.மீ. தூரம் நடந்து சென்று மக்கள் குறைகளைக் கேட்ட ஆட்சியர்

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகேயுள்ள அலக்கட்டு அடர்வன கிராமத்துக்கு 10 கி.மீ. தொலைவு நடந்து

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகேயுள்ள அலக்கட்டு அடர்வன கிராமத்துக்கு 10 கி.மீ. தொலைவு நடந்து சென்று,  மலைப்பகுதி மக்களின் குறைகளை தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி கேட்டறிந்தார்.
 பென்னாகரம் வட்டம், வட்டுவனஅள்ளி ஊராட்சிக்குள்பட்டது அலக்கட்டு.  அடர்வனப் பகுதியில் அமைந்துள்ள இக் கிராமத்துக்கு செல்ல மலை அடிவாரத்தில் உள்ள சீங்காடுவிலிருந்து சுமார் 10 கி.மீ.  மலைப்பாதை உள்ளது.  இக் கிராமத்துக்குச் செல்ல இதுவரை சாலை அமைக்கப்படாததால்,  வனப் பகுதியில் நடந்தே தான் செல்ல வேண்டும்.
இக் கிராமத்தில் சுமார் 25 குடும்பங்கள் வசிக்கின்றன.  இங்கு வசிப்போர்,  மலைப் பகுதியில் உள்ள மானாவாரி நிலங்களில் கேழ்வரகு,  சோளம், அவரை உள்ளிட்டவற்றை பயிர் செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.  இந்த மலைக் கிராம மக்கள்,  தங்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் என நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில்,  இவர்களது கோரிக்கைகளைப் பரிசீலித்த தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி,  அலக்கட்டு மலைக் கிராமத்துக்கு சீங்காடு மலை அடிவாரப் பகுதியிலிருந்து மலைப்பாதை வழியாக,  கரடு,முரடான பாதையில் அரசுத் துறை அலுவலர்களுடன் சுமார் 10 கி.மீ. தொலைவு வியாழக்கிழமை நடந்து சென்று,  அங்குள்ள மக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து,  அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரின், கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.  மேலும்,  பள்ளியின் அருகில், அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் சிறப்பு பயிற்சி மையத்தில் பயிலும் குழந்தைகளின் கல்வி நிலை,  வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு அளிக்கப்படும் இணை உணவு மற்றும் ஆலோசனை குறித்தும் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து,  அலக்கட்டு மலைக் கிராம மக்களிடம் ஆட்சியர் சு.மலர்விழி பேசியது:  அலக்கட்டு கிராம மக்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை கட்டாயம் படிக்க வைக்க வேண்டும். குழந்தைகள் கல்வி பயில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.  தங்களுக்கு கிடைக்க வேண்டிய நலத் திட்ட உதவிகளையும் வழங்க மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  மேலும்,  இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு குடிநீர் ஏற்றும் குழாயில் ஏற்பட்டுள்ள பழுது, 2 நாள்களில் சரிசெய்யப்பட்டு,  சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதேபோல,  இந்த மலைக் கிராமத்தில் பாதுகாப்பற்ற சூழலில், சாலை வசதி,  சுகாதார வசதி இன்றி வசித்து வரும் பொதுமக்கள்,  தங்கள் குழந்தைகளுக்கு சரியான கல்வியைக் கூட வழங்க இயலாமல், பெண் குழந்தைகளுக்கு இளவயது திருமணம் செய்துவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
எனவே, இங்குள்ள மக்களுக்கு மலைக்கு கீழ் சமதளப் பரப்பில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஓர் ஏக்கர் நிலமும், வீடும் கட்டிக்கொடுத்து, வாழ்வாதாரத்துக்கு கறவை மாடுகளை வழங்கும் திட்டம் மாவட்ட நிர்வாகத்தின் பரிசீலனையில் உள்ளது.  இத் திட்டத்தை அனைவரும் ஏற்று, ஒப்புதல் அளித்தால் உடனடியாக நிறைவேற்றப்படும். அதேபோல, அலக்கட்டு கிராமத்துக்கு சாலை வசதி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகமும்,  தமிழக அரசும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.
இந்த ஆய்வின்போது,  பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், கிருஷ்ணன், மண்டல துணை வட்டாட்சியர் பிரபு,  வனச்சரகர் செல்வம், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com