தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 9,10,908 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

தருமபுரி, கிருஷ்ணகிரி  மாவட்டங்களில்  9,10,908 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

தருமபுரி, கிருஷ்ணகிரி  மாவட்டங்களில்  9,10,908 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் சேர்த்து மொத்தம் ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.1,126.55 மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை அமைச்சர் கே.பி.அன்பழகன், தருமபுரியை அடுத்த அன்னசாகரத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தார். தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் 446 முழு நேர நியாயவிலைக் கடைகள், 561 பகுதி நேர நியாயவிலைக் கடைகள், 9 மகளிர் நியாயவிலைக் கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் 41 நியாயவிலைக் கடைகள் என 1,057 கடைகள் உள்ளன.
இந்த கடைகளின் மூலம் தருமபுரி வட்டத்தில் 66,905 குடும்ப அட்டைதாரர்களும், நல்லம்பள்ளி வட்டத்தில் 53710 குடும்ப அட்டைதாரர்களும், பாலக்கோடு வட்டத்தில் 60,390 குடும்ப அட்டைதாரர்களும், காரிமங்கலத்தில் 45,943 குடும்ப அட்டைதாரர்களும், பென்னாகரத்தில் 66,816 குடும்ப அட்டைதாரர்களும், அரூர் வட்டத்தில் 72,046 குடும்ப அட்டைதாரர்கள் என மொத்தம் 4,21,558 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர். 
விழாவில் தருமபுரி சார்- ஆட்சியர் ம.ப.சிவன் அருள், தருமபுரி மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் மா.சந்தானம், தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் டி.ஆர்.அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஒசூரில்... ஒசூரில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
ஒசூர் வட்டம் தொரப்பள்ளி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்திற்குள்பட்ட குமுதேபள்ளி நியாயவிலைக் கடையில் 1013 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமையில் நடைபெற்றது. ஒசூர் கோட்டாட்சியர் விமல்ராஜ் முன்னிலை வகித்தார்.
பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாயை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி வழங்கி பேசியது:
ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிகழாண்டு பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட ரூபாய் ஆயிரம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மூலம் நடத்தப்பட்டு வரும் 1,058 நியாயவிலைக் கடைகள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் நடத்தப்பட்டு வரும் 36 நியாயவிலைக் கடைகள் என மொத்தம் 1,094 கடைகளில் 4 லட்சத்து 89 ஆயிரத்து 350 குடும்ப அட்டைதாரர்கள் இதன்மூலம் பயனடைவர் என்றார்.
இதில் கூட்டுறவுச் சங்க இணைப் பதிவாளர் பிரபாகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர், துணை பதிவாளர் ரவிச்சந்திரன்,  கூட்டுறவுச் சங்க தலைவர் ஜெயராம், மாவட்ட அதிமுக பொருளாளர் கே.நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com