மத்திய அரசு நிதியில் நடைபெறும் பணிகள் ஆய்வு
By DIN | Published On : 15th July 2019 10:09 AM | Last Updated : 15th July 2019 10:09 AM | அ+அ அ- |

அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் நடைபெறும் பணிகள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி பத்மஜா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் இருந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டப் பணிகள், ஏரிகளில் மழைநீர் சேகரிப்பு பணிகள், திடக்கழிவு மேலாண்மை, நீர்த்தேக்கங்கள், தடுப்பணைகள், விவசாய மேம்பாட்டுப் பணிகள், சொட்டு நீர்ப் பாசன வசதிகள், வனத்துறையில் மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன.
இதையடுத்து, மத்திய குழுவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பத்மஜா தலைமையிலான அரசு அதிகாரிகள், கீழ்மொரப்பூர், பறையப்பட்டி, எச்.ஈச்சம்பாடி ஆகிய பகுதிகளில் வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு, தடுப்பணைகள், திடக்கழிவு மேலாண்மை, தொகுப்பு வீடுகள் அமைத்தல், சூரிய மின் சக்தியில் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, அரூர் பெரிய ஏரி, சாமண்டஹள்ளியில் மழைநீர் சேகரிப்பு பணிகள், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் சொட்டு நீர்ப் பாசன வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.