வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு காப்பீடு வழங்கக் கோரிக்கை
By DIN | Published On : 14th June 2019 10:49 AM | Last Updated : 14th June 2019 10:49 AM | அ+அ அ- |

அரூர்: வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு காப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து கரும்பு விவசாயிகளின் கூட்டமைப்பினர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழியிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தலைமையில் வியாழக்கிழமை ஜமாபந்தி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் அனைத்து கரும்பு விவசாயிகளின் கூட்டமைப்பினர் சார்பில் அளிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனு விவரம்: பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2018-19-ஆம் நிதி ஆண்டில் பயிரிடப்பட்ட 491 ஏக்கர் கரும்பு பயிர்கள் வறட்சியால் காய்ந்துவிட்டன. இதேபோல் 2019-ஆம் ஆண்டில் 700 ஏக்கர் கரும்பு பயிர்கள் வறட்சியால் காய்ந்துவிட்டன.
வறட்சியால் காய்ந்த கரும்பு பயிர்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, காய்ந்த கரும்பு பயிர்களுக்கு காப்பீடு நிறுவனம் சார்பில் ஏக்கருக்கு தலா ரூ.45 ஆயிரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், வறட்சியால் காய்ந்த தென்னை, மா, மரவள்ளிக் கிழங்கு, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களுக்கும் அரசு சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர்கள் வெங்கடாசலம், பழனி, அனைத்து கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவர்கள் ராஜசேகர், ராமலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூ. வட்டச் செயலர் சி.வஞ்சி, மாவட்டக்குழு உறுப்பினர் டி.சேகர் உள்ளிட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.