அரூரில் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
By DIN | Published On : 06th March 2019 08:56 AM | Last Updated : 06th March 2019 03:05 PM | அ+அ அ- |

அரூரில் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
அரூர் நகரில் பாட்சாபேட்டை, வர்ணதீர்த்தம் ஆகிய இடங்களில் 3 திரையரங்குகள் உள்ளன. இந்த திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். அரசு அனுமதித்துள்ள கட்டணங்களை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் கூறுகின்றனர்.
சுகாதார வசதிகளை மேம்படுத்துவது அவசியம் :
திரையரங்குகளில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி இல்லை. மேலும், கழிப்பிடங்கள் தூய்மையாக பராமரிக்கப்படாமல் துர்நாற்றம் வீசுவதாக புகார் கூறுகின்றனர். திரைப்படம் பார்க்க வருவோர் குடிநீர் உள்ளிட்ட தின்பண்டங்களை வெளியில் இருந்து எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லையாம். அதேபோல், திரையரங்க வளாகத்தில் விற்கப்படும் தின்பண்டங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
எனவே, அரூரில் உள்ள திரையரங்குகளில் அரசு அனுமதித்துள்ள கட்டணங்களை மட்டுமே வசூல் செய்ய வேண்டும். குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளை மேம்படுத்த வேண்டும். திரையரங்குகளில் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை அரசு உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில் புகார் எண்களை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.