உணவில் விஷம் கலந்து மகளை கொலை செய்ய முயற்சி: பெற்றோர் கைது
By DIN | Published On : 06th March 2019 08:56 AM | Last Updated : 06th March 2019 08:56 AM | அ+அ அ- |

பாலக்கோடு அருகே பள்ளி மாணவியை கொலை செய்ய முயற்சித்ததாக பெற்றோரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம், குளிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குமார்(42). இவரது மனைவி தனலட்சுமி (35). இத் தம்பதிக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் ஒருவர் மல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 -ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்த நிலையில், 10-ஆம் வகுப்பு பயிலும் தனது மகளுக்கு, இளம் வயது திருமணம் செய்துவைக்க பெற்றோர் முயற்சித்துள்ளனர். பெற்றோரின் இந்த நடவடிக்கைக்கு, பள்ளி மாணவி எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளார். இதனால், பெற்றோர் அவரை துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பள்ளிக்குச் சென்ற தனது மகளின் உணவில் விஷம் கலந்தனராம். இதுகுறித்து சந்தேகமடைந்த அந்த மாணவி, மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், உணவில் விஷம் வைத்து மகளைக் கொலை செய்ய பெற்றோர் முயற்சித்தது போலீஸாருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மாணவியின் தந்தை குமார், தாய் தனலட்சுமி ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும், அந்த மாணவியை குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்தனர்.