தருமபுரியில் மீண்டும் சதத்தை கடந்தது வெயில்!
By DIN | Published On : 06th March 2019 08:59 AM | Last Updated : 06th March 2019 08:59 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டத்தில் வெயில் செவ்வாய்க்கிழமை மீண்டும் சதத்தை கடந்து வாட்டியது.
தருமபுரி மாவட்டத்தில், கோடைக்கு முன்பே வெயிலின் அளவு சற்றுக் கடுமையாக இருந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் வரை அதிகாலை வேளையில் லேசான பனி, குளிர்ந்த காற்று வீசியது. அதேபோல, பகல் வேளையில் வெயிலின் தாக்கம் கூடுதலாக இருந்தது.
இந்த நிலையில், தருமபுரி மாவட்டத்தில், கடந்த சில நாள்களுக்கு முன்பு, வெயில் 100 டிகிரியைக் கடந்தது. இதைத் தொடர்ந்து, ஒரு சில நாள்களிலேயே, தற்போது, மீண்டும் வெயிலின் அளவு சதத்தை கடந்து 101.1 டிகிரியாக வாட்டி வதைத்து. இதனால், பகல் வேளைகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்ததால், பொதுமக்கள் பரிதவித்தனர். மேலும், வெப்பத்தைத் தணிக்க, இளநீர், பழச்சாறு, குளிர்பானங்களை வாங்கி பருகினர். கோடையின் தொடக்கத்திலேயே 100 டிகிரியைக் கடந்து வெயில் வாட்டி வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.