மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தி.மு.க. தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்: பி.ஆர்.பாண்டியன்
By DIN | Published On : 06th March 2019 08:56 AM | Last Updated : 06th March 2019 08:56 AM | அ+அ அ- |

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில், மத்திய அரசின் தமிழக விரோத நடவடிக்கைக்கு முடிவு கட்ட, திமுக தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றார் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன்.
விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, செவ்வாய்க்கிழமை தருமபுரியில் விழிப்புணர்வு பரப்புரையில் ஈடுபட்ட அவர், செய்தியாளர்களிடம் கூறியது: தருமபுரி மாவட்டம், கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து வறட்சியைச் சந்தித்து வருகிறது. பயிர்கள் அனைத்தும் கருகிப்போயுள்ளன. நிலத்தடி நீர் வற்றிப் போனது. ஆகவே, இந்த மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். வேளாண் கடன்கள் முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும். எண்ணேகொல்புதூர்-தும்பலஅள்ளி கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். காவிரி ஆற்றில் ஒகேனக்கல் அருகே ராசிமணலில் அணை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அணையைக் கட்டுவதால், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் மாவட்டம் வரையுள்ள விளை நிலங்களில் நிலத்தடி நீரைப் பாதுகாக்க முடியும்.
மேக்கேதாட்டில் அணை கட்டும் கர்நாடக அரசின் சதிக்கு மத்திய அரசு துணைபோகிறது. மக்களவைத் தேர்தலுக்கு முன்பே, மேக்கதாட்டில் அணை கட்ட அனுமதி வழங்கப்படும் என வெளியாகியுள்ள தகவல்கள் பேரிடியாக உள்ளன. அணைக்கு அனுமதி வழங்க மத்திய அரசின் பொறியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். மத்திய அரசின் தமிழக விரோத நடவடிக்கைக்கு முடிவு கட்ட, இந்த விவகாரத்தில் திமுக தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.