தருமபுரியில் திமுக, பாமக உள்ளிட்ட 23 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு: 4 பேர் மனுக்கள் நிராகரிப்பு
By DIN | Published On : 28th March 2019 09:07 AM | Last Updated : 28th March 2019 09:07 AM | அ+அ அ- |

தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த திமுக, பாமக வேட்பாளர்கள் உள்பட 23 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. சுயேச்சைகள் உள்ளிட்ட 4 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கியது. சனி, ஞாயிறு தவிர, மார்ச் 26-ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.
இதில், அதிமுக கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் டி.என்.வி. செந்தில்குமார், அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன், மக்கள் நீதி மய்யம் சார்பில் டி. ராஜசேகர், நாம் தமிழர் கட்சி சார்பில் ருக்மணி தேவி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சி.சிவானந்தம் மற்றும் மாற்று வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 27 பேர் 36 மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் புதன்கிழமை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை, மாவட்டத் தேர்தல் அலுவலர் சு. மலர்விழி, அனைத்து வேட்பாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் முன்னிலை நடைபெற்றது.
இதில், திமுக வேட்பாளர் செந்தில்குமாரின் மனு ஏற்கப்பட்டது. இதனால், அவருடைய மாற்று வேட்பாளர் டி.என்.வி. செல்வராஜ் மனுவும், முன் மொழிவுகள் போதிய எண்ணிக்கையில் குறிப்பிடப்படாததால் மூன்று சுயேச்சைகள் என நான்கு பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அன்புமணி, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் உள்ளிட்ட 23 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. மனுக்களைத் திரும்ப பெற கடைசி நாளான வெள்ளிக்கிழமை மனுக்கள் ஏதும் திரும்ப பெற்றால் அன்றைய தினம் மொத்தம் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுவர் எனத் தெரியவரும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...