தருமபுரி மக்களவைத் தொகுதியில் திமுக, பாமக உள்பட 15 பேர் போட்டி
By DIN | Published On : 30th March 2019 09:24 AM | Last Updated : 30th March 2019 09:24 AM | அ+அ அ- |

தருமபுரி மக்களவைத் தொகுதியில் திமுக, பாமக, அமமுக உள்பட 15 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி 26-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், திமுக வேட்பாளர் டி.என்.வி. செந்தில்குமார், பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், அமமுக வேட்பாளர் பி.பழனியப்பன், மக்கள் நீதி மய்யம் ராஜசேகர் உள்பட மொத்தம் 27 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 27-ஆம் தேதி நடைபெற்றது. இதில், சுயேச்சைகள் உள்ளிட்ட 4 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து, மொத்தம் 23 பேர் போட்டியில் இருந்தனர். இதனைத் தொடர்ந்து, மார்ச் 28-ஆம் தேதி இருவரும், மார்ச் 29-ஆம் தேதி 6 பேரும் என மொத்தம் 8 பேர் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனர். இதையடுத்து, மொத்தம் 15 பேர் போட்டி என இறுதியானது. இதில், திமுக வேட்பாளர்
டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அன்புமணி ஆகியோர் அவர்களது கட்சி சின்னத்திலும், அமமுக வேட்பாளர் பி.பழனியப்பன் பரிசுப்பெட்டி சின்னத்திலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ருக்மணிதேவி கரும்பு விவசாயி சின்னம் மற்றும் சுயேச்சைகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களில் போட்டியிடுகின்றனர்.
தருமபுரி மக்களவைத் தொகுதியில் இறுதி வேட்டபாளர் பட்டியலை பொதுப் பார்வையாளர் தேபேந்திரகுமார் ஜெனா முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் சு.மலர்விழி செய்தியாளர்களிடம் கூறியது: தருமபுரி மக்களவைத் தொகுதியில் இறுதி வேட்பாளர் மற்றும் சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் நிறைவுபெற்றன. இறுதியாக 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்களுக்கு தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
பெல் நிறுவன பொறியாளர்களைக்கொண்டு முதல்கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை பணிகள் நிறைவடைந்துள்ளன. தருமபுரி செட்டிக்கரை அரசுப் பொறியியல் கல்லூரியில் தருமபுரி மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணிகள் பொது தேர்தல் பார்வையாளர், வேட்பாளர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்படும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கி, அக் கணக்கிலிருந்து பணம் எடுத்து தேர்தல் செலவுகளை மேற்கொள்ள வேண்டும், 3 நாள்களுக்கு செலவுக் கணக்குகளை முறையாக தாக்கல் செய்யவேண்டும். தேர்தல் முடிந்து 30 நாள்களுக்குள் இறுதி செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...