பணி நிரந்தரம் கோரி ஊர்க்காவல் படை வீரர் தற்கொலை மிரட்டல்
By DIN | Published On : 05th May 2019 03:14 AM | Last Updated : 05th May 2019 03:14 AM | அ+அ அ- |

பணி நிரந்தரம் செய்யக் கோரி, மொரப்பூரில் ஊர்க்காவல் படை வீரர் பிரபு (33) செல்லிடப்பேசி கோபுரத்தின் மீது ஏறி சனிக்கிழமை தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அருகேயுள்ள ராசலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் பிரபு (33). இவர், ஊர்க்காவல் படையில் கடந்த 4 வருடங்களாக பணிபுரிந்து வருகிறாராம். இந்த நிலையில், தன்னையும், ஊர்க்காவல் படையில் பணிபுரியும் அனைத்து வீரர்களையும் தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, மொரப்பூர் ரயில் நிலையம் அருகில் சுமார் 200 அடி உயரமுள்ள தனியார் செல்லிடப்பேசி உயர் கோபுரத்தின் மீது ஏறிக்கொண்டு, மதியம் 1 மணியளவில்தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
தகவல் அறிந்த அரூர் டிஎஸ்பி ஏ.சி.செல்லப்பாண்டியன், தீயணைப்பு நிலைய வீரர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஊர்க்காவல் படை வீரர் பிரபுவிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு செல்லிடப்பேசியின் கோபுரத்தில் இருந்து பிரபு கீழே இறங்கி வந்தார். இதையடுத்து, பிரபுவிடம் மொரப்பூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.