அரூர் ஏரி பெரிய கால்வாய்களை தூய்மை செய்யக் கோரிக்கை
By DIN | Published On : 05th May 2019 05:20 AM | Last Updated : 05th May 2019 05:20 AM | அ+அ அ- |

அரூர் பெரிய ஏரியின் கால்வாய்களை தூய்மை செய்ய பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பாஜக அரூர் ஒன்றியத் தலைவர் கே.வெங்கடாசலம், தமிழக முதல்வருக்கு வியாழக்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு: அரூர் பெரிய ஏரி சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியில் மழை நீர் தேங்குவதால் அரூர் நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. அதேபோல், பச்சினாம்பட்டி, எச்.தொட்டம்பட்டி, நாச்சினாம்பட்டி, பழைய பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இந்தப் பகுதியிலுள்ள விவசாய நிலங்கள் பாசன வசதிகளை பெறும். இந்த நிலையில், அரூர் பெரிய ஏரிக்கு நீர் வரத்துள்ள கால்வாய்கள் தூர் அடைந்து காணப்படுகின்றன. அதேபோல், ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறும் ராஜகால்வாய் பகுதியில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால், மழைக் காலங்களில் அரூர் நகரில் இருந்து மழை நீர் மற்றும் குடியிருப்புகளின் கழிவுநீர் வெளியேறாமல் தேங்குவதுடன், சுகாதாரக் கேடுகள் ஏற்படுகின்றன.
எனவே, பொதுப்பணித் துறை சார்பில் அரூர் பெரிய ஏரியின் நீர்வரத்துக் கால்வாய்களை தூய்மை செய்ய வேண்டும். அதேபோல், உபரி நீர் வெளியேறும் ராஜகால்வாய் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு நடவடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...