நீட் தேர்வு: அரசு சிறப்பு பயிற்சி மையத்தில் படித்த 435 பேர் எழுதுகின்றனர்
By DIN | Published On : 05th May 2019 05:21 AM | Last Updated : 05th May 2019 05:21 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டத்தில் நீட் தேர்வுக்கான அரசின் சிறப்பு பயிற்சி மையத்தில் படித்த 435 அரசு பள்ளி மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
மருத்துவப் படிப்பில் மாணவ, மாணவியர் சேர தேசிய தகுதிக்காண் நுழைவைத் தேர்வு (நீட்) நடத்தப்படுகிறது. இத் தேர்வை அரசு பள்ளி மாணவ, மாணவியர் சிரமமின்றி எழுத தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநிலம் முழுவதும் சிறப்பு பயிற்சி மையங்கள் அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்டன.
இதில் தருமபுரி மாவட்டத்தில் இலக்கியம்பட்டி அரசு பள்ளி, பெரியாம்பட்டி, மாரண்டஹள்ளி, பாப்பாரப்பட்டி, நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளில் இச் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.
இந்த பயிற்சி மையங்களில் பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவர்கள் பயிற்சி பெற்று வந்தனர். மேலும், தருமபுரி மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் 70 பேர் கோவையில் நடைபெற்ற சிறப்பு பயிற்சி மையத்துக்கும், 20 பேர் சென்னையில் நடைபெற்ற பயிற்சி மையத்துக்கும் சென்று பயிற்சி பெற்றனர்.
இந்த நிலையில், மே 5-ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வை தருமபுரி மாவட்டத்தில் இலவச பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 435 அரசு பள்ளி மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இவர்களுக்கு சேலம், நாமக்கல், கோவை, வேலூர், சென்னை ஆகிய இடங்களில் தேர்வு எழுத அனுமதி கிடைத்துள்ளது.
இதில், பெரும்பாலான மாணவ, மாணவியருக்கு சேலம் மாவட்டத்தில் நடைபெறும் மையத்தில் தேர்வு எழுத அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்த மாணவ, மாணவியர் அனைவரும் தேர்வு எழுத ஏதுவாக வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அந்தந்த பகுதிகளுக்கு புறப்பட்டு சென்றனர். தருமபுரி மாவட்டத்தில், கடந்த ஆண்டு அரசு பள்ளி மாணவ, மாணவியர் 300 பேர் மட்டுமே நீட் தேர்வு எழுதினர். இந்த நிலையில், நிகழாண்டு இத் தேர்வு, எழுதுவோரின் எண்ணிக்கை கூடுதலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...