பாப்பிரெட்டிப்பட்டியில் 8 வாக்குச் சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு
By DIN | Published On : 19th May 2019 09:26 AM | Last Updated : 19th May 2019 09:26 AM | அ+அ அ- |

தருமபுரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பாப்பிரெட்டிப்பட்டியில் 8 வாக்குச் சாவடிகளில் ஞாயிற்றுக்கிழமை மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு பொதுத் தேர்தல், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் ஏப். 18-இல் நடைபெற்றது.
இந்த நிலையில், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நத்தமேடு, டி.அய்யம்பட்டி, ஜாலிபுதூர் ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்டிருந்த 8 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவின்போது, முறைகேடு நிகழ்ந்ததாகப் புகார் எழுந்தது.
இதுகுறித்து திமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் அளித்த புகாரின்பேரில், விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம் மே 19-இல் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டது.
இதன்படி, நத்தமேடு கிராமத்தில் 4 வாக்குச் சாவடிகள், அய்யம்பட்டி, ஜாலிபுதூர் ஆகிய கிராமங்களில் தலா 2 என மொத்தம் 8 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெற உள்ளது.
இந்த 8 வாக்குச் சாவடிகளிலும் ஆண்கள் 3,060 பேரும், பெண்கள் 2,952 பேர் என மொத்தம் 6,012 பேர் வாக்களிக்க உள்ளனர்.
மறு வாக்குப்பதிவுக்காக பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து சம்மந்தப்பட்ட கிராமங்களுக்கு சனிக்கிழமை மாலை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மை, எழுதுபொருள்கள் உள்ளிட்ட பொருள்கள் போலீஸார் பாதுகாப்புடன் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கொண்டுச் சென்றனர்.
மறு வாக்குப்பதிவு அமைதியாக நடத்தி மூன்று கிராமங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் யார்?
தருமபுரி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், திமுக சார்பில் டிஎன்வி எஸ்.செந்தில்குமார், அமமுக சார்பில் பி.பழனியப்பன், மக்கள் நீதி மய்யம் சார்பில் டி.ராஜசேகர், நாம் தமிழர் கட்சி சார்பில் ருக்மணிதேவி உள்ளிட்ட 15 பேர் போட்டியிட்டனர்.
இதேபோல, பாப்பிரெட்டிப்பட்டி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கோவிந்தசாமி, திமுக வேட்பாளர் ஆ.மணி, அமமுக வேட்பாளர் டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.