பாப்பிரெட்டிப்பட்டி வனப்பகுதியில் மூங்கில் மரங்கள் கடத்திய லாரிகள் பறிமுதல்
By DIN | Published On : 19th May 2019 09:27 AM | Last Updated : 19th May 2019 09:27 AM | அ+அ அ- |

பாப்பிரெட்டிப்பட்டி வனப் பகுதியில் காய்ந்த மூங்கில் மரங்களை வெட்டுவதற்காக ஒப்பந்தம் பெறப்பட்டவர் பச்சை மூங்கில் மரங்களையும் வெட்டிக் கடத்துவதாக விவசாயிகள் தெரிவித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட வனத் துறையினர் 4 லாரிகளை பறிமுதல் செய்தனர்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள மஞ்சவாடி கணவாய் வனப் பகுதியில் ஏராளமான மூங்கில் மரங்கள் உள்ளன.
இந்த வனப்பகுதியில் அரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை செல்லும் பகுதியிலுள்ள காய்ந்துபோன மூங்கில் மரங்களை வெட்டுவதற்காக அந்தியூரைச் சேர்ந்த தனியார் ஒப்பந்ததாரர் ஒருவருக்கு வனத்துறை சார்பில் அண்மையில் ஒப்பந்தம் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், ஒப்பந்தம் எடுத்தவர் காய்ந்த மூங்கில் மரங்களுடன் சேர்த்து பச்சை மூங்கில் மரங்களையும் வெட்டிக் கடத்துவதாக புகார் எழுந்தது.இதேபோல், சென்னை முதல் சேலம் வரையிலான பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் அளவீடு செய்துள்ள பகுதிகளில் இருந்த பச்சை மூங்கில் மரங்களையும், கடந்த சில தினங்களாக வெட்டி லாரியில் கடத்தியதாகக் கூறப்படுகிறது.
தகவல் அறிந்த சமூக ஆர்வலர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், மஞ்சவாடி கணவாய் வனப்பகுதியில் சனிக்கிழமை காலை 11.30 மணியவில் மூங்கில் மரங்களை வெட்டும் பணிகளைத் தடுத்து நிறுத்தி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
வனத் துறையினர் விசாரணை: அதன்பேரில் தருமபுரி மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார், மஞ்சவாடி கணவாய் பகுதியில் பச்சையான மூங்கில் மரங்கள் வெட்டப்பட்டுள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில் காய்ந்த மூங்கில் மரங்களுடன் சேர்த்து பச்சையான மூங்கில் மரங்களையும் வெட்டி இருப்பது தெரிய வந்ததுள்ளது. இதையடுத்து, 4 லாரியில் இருந்த பச்சை மற்றும் காய்ந்த மூங்கில் மரங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து அரூர் வனச்சரகர் தங்கராஜ் தலைமையிலான வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.