மறுவாக்குப் பதிவு அமைதியாக நடைபெற நடவடிக்கை: ஆட்சியர்
By DIN | Published On : 19th May 2019 09:27 AM | Last Updated : 19th May 2019 09:27 AM | அ+அ அ- |

தருமபுரியில் 8 வாக்குச் சாவடிகளில் நடைபெறும் மறு வாக்குப்பதிவை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் சு.மலர்விழி தெரிவித்தார்.
இதுகுறித்து சனிக்கிழமை தருமபுரியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாப்பிரெட்டிப்பட்டி பேரவைத் தொகுதிக்குள்பட்ட நத்தமேடு, டி.அய்யம்பட்டி, ஜாலிபுதூர் ஆகிய கிராமங்களில் 8 வாக்குச் சாவடிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மறு வாக்குப்பதிவு பணியில் ஈடுபடும் அனைத்து அலுவலர்கள், பணியாளர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு பணியாணை குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மறு வாக்குப்பதிவு அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், அவர்களுக்கு நம்பிக்கையை மேம்படுத்தவும் சனிக்கிழமை போலீஸாரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
8 வாக்குச்சாவடிகளிலும், மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் இடைத் தேர்தலில் வாக்களிக்க இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வீதம் மொத்தம் 16 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தயார்நிலையில் 16 வாக்குப்பதிவு இயந்திரங்கள் என மொத்தம் 32 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உரிய பாதுகாப்புடன் எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மறு வாக்குப்பதிவு நடைபெறும் 8 வாக்குச்சாவடிகள் தலா மூன்று வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கு ஒரு விடியோ கேமரா என 8 வீடியோ கேமராக்கள் மூலம் விடியோ பதிவு செய்யப்பட உள்ளது. வாக்குச்சாவடிகளில் வெளிப்பகுதிகளில் 100 மீ. மற்றும் 200 மீட்டர் இடைவெளியில் 35 கேமராக்கள் பொருத்தப்பட்டு மக்கள் நடமாட்டம் பதிவு செய்யப்படுகிறது. இதே போல், மூன்று கிராமங்களில் 9 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிப்படும்.
தமிழக சிறப்பு காவல் படை மற்றும் போலீஸார் என 566 காவலர்களும், மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த 24 வீரர்கள் பாதுகாப்பு பணியில் மேற்கொள்வர். அதேபோல, 8 நுண் பார்வையாளர்கள், 50 தேர்தல் அலுவலர்கள் வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபடுவர்.
வாக்குப் பதிவு நிறைவடைந்த பின்பு, மறுவாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது, வாக்கு எண்ணிக்கைக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் என்ற பச்சை வர்ணத்தில் வில்லை ஒட்டப்பட்டு வாக்குச்சாவடிகளில் உள்ள முகவர்களிடம் கையொப்பம் பெறப்படும். இதைத்தொடர்ந்து, அந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான செட்டிக்கரை பொறியியல் கல்லூரியில் உள்ள அறையில் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்படும்.
மேலும், ஏற்கெனவே இந்த 8 வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது வாக்கு எண்ணிக்கைக்கு பயன்படுத்தாதவை என வில்லை ஒட்டப்பட்டு தனியாக வைக்கப்படும் என்றார்.
தயார் நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் 8 வாக்குச் சாவடிகளில் இன்று நடைபெறும் மறு வாக்குப்பதிவுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட டி.அய்யம்பட்டி, நத்தமேடு, ஜாலிப்புதூர் ஆகிய இடங்களில் உள்ள 8 வாக்குச் சாவடிகளில் ஞாயிற்றுக்கிழமை (மே 19) மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த நிலையில், மறு வாக்குப்பதிவுக்கு தேவையான 16 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டன. அதேபோல், மாற்றுத்தேவைக்காக 16 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை துப்பாக்கி ஏந்திய போலீஸாரின் பாதுகாப்புடன் எடுத்துச் சென்றனர். தருமபுரி மக்களவைத் தேர்தல் பொதுப் பார்வையாளர் தேபேந்திரகுமார் ஜெனா, மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியின் இடைத் தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா ராணி உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.