தருமபுரி தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவேன்: டிஎன்வி எஸ்.செந்தில்குமார்

தருமபுரி மக்களவைத் தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவேன் என்றார் டிஎன்வி எஸ்.செந்தில்குமார்.


தருமபுரி மக்களவைத் தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவேன் என்றார் டிஎன்வி எஸ்.செந்தில்குமார்.
தருமபுரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் டிஎன்வி எஸ்.செந்தில்குமார் தொடர்ந்து முன்னிலை வகித்தார். இரவு 9 மணி நிலவரப்படி சுமார் 63,301 வாக்கு வித்தியாசத்தில் பாமக வேட்பாளர் அன்புமணியைக் காட்டிலும் முன்னிலை வகித்தார். இதைத் தொடர்ந்து, அவரது வெற்றி உறுதியானது.
இதையடுத்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தருமபுரி மக்களவைத் தேர்தல் வெற்றியை, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு காணிக்கையாக்குகிறேன். எனது வெற்றிக்காக பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதிக்கும் நன்றி. மேலும், எனது தாத்தா டி.என்.வடிவேல் கவுண்டர் ஆசீர்வாதம், எனது வெற்றிக்கு காரணமாக இருந்த திமுக மற்றும் தோழமைக் கட்சியைச் சேர்ந்தவர்கள், எனது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றியை உரித்தாக்குகிறேன்.
அன்புமணி வெளியூரைச் சேர்ந்தவர். அவரால், இத்தொகுதி மக்களுக்கு பணியாற்ற முடியாது என்பதால் தான், அவரை இங்கு போட்டியிட வேண்டாம் என கூறினேன். கடந்த ஐந்தாண்டுகளில், நல்ல திட்டங்களை அவர் கொண்டுவரவில்லை. குறிப்பாக, குடிநீர் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. நத்தமேட்டில் பாமகவினர் தான் அதிகமாக உள்ளனர். இக்கிராமத்தை தத்தெடுத்திருந்த அன்புமணி, அங்கு ஒரு கால்நடை மருத்துவமனை கொண்டுவர கூட நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், இப்பகுதி அடிப்படை வசதிகள் இன்றி உள்ளது.
தருமபுரி மக்களவைத் தொகுதி வளர்ச்சிக்கு, கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆலோசனை, வழிகாட்டுதல் படி நடவடிக்கை எடுப்பேன். தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவேன். பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com