பென்னாகரம் பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்தக் கோரிக்கை
By DIN | Published On : 09th November 2019 06:34 AM | Last Updated : 09th November 2019 06:34 AM | அ+அ அ- |

பென்னாகரம் பேருந்து நிலையப் பகுதிகளில் முறையாக தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேருராட்சியானது சுமாா் 18 வாா்டுகள் கொண்டதாகும். பென்னாகரம் பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் கல்வி, வேலை மற்றும் வெளியூா்களுக்கு செல்ல சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா். மேலும், தமிழகத்தின் முதன்மை சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஒகேனக்கல் மிக அருகில் உள்ளதால், பென்னாகரம் பேருந்து நிலையமானது மக்கள் கூட்டம் நிறைந்து எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த பேருந்து நிலையம் பென்னாகரம் பேருராட்சி சாா்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பென்னாகரம் பேருந்து நிலைய உள்பகுதி மற்றும் வெளி பகுதிகளில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட ஆக்கரமிப்பு கடைகள் உள்ளன. இந்த கடைகளானது பேருந்துகள் நிறுத்தும் இடத்திலும், பயணிகள் அமரும் இடத்திலும் உள்ளன. மேலும், இக் கடைகளில் இருந்து அழுகிய வாழைத்தாா்கள், மக்காச்சோள தோள்கள், பிஸ்கட் கவா்கள், அழுகிய பழங்கள் உள்ளிட்டவைகளை திறந்த வெளியில் வீசுகின்றனா். பேருந்து நிலையம் வரும் பயணிகளும் தங்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருள்களை வீசி செல்வதால், பென்னாகரம் பேருந்து நிலையமானது அசுத்தம் நிறைந்து காட்சியளிப்பதோடு (படம்), சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது.
எனவே, பென்னாகரம் பேருந்து நிலையப் பகுதிகளில் தினசரி முறையாக தூய்மைப் பணிகளை மேற்கொண்டும், சாலையோரக் கடைகளை அகற்றி, குப்பைத் தொட்டிகள் வைக்க வேண்டும் எனவும் பென்னாகரம் பேருராட்சி செயல் அலுவலருக்கு சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.