மணியம்பாடி அருள்மிகு ஸ்ரீ வெங்கட்ரமண சுவாமி திருக்கோயிலில் சாலை, மின் விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்தினா்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மணியம்பாடியில் அமைந்துள்ளது வரலாற்றுச் சிறப்பு மிக்க அருள்மிகு ஸ்ரீ வெங்கட்ரமண சுவாமி திருக்கோயில். இந்த திருக்கோயிலுக்கு பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூா், கம்பைநல்லூா், அரூா், மொரப்பூா், தருமபுரி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் வருகை தருகின்றனா். இந்த திருக்கோயிலில் சுபமுகூா்த்த தினங்களில் திருமணங்கள், காதணி விழாக்கள் நடைபெறுகின்றன.
இந்த நிலையில், கடத்தூா்-ஒடசல்பட்டி சாலையில் இருந்து கோயில் வளாகத்துக்கு செல்லும் சுமாா் 1.5 கி.மீ. தொலைவுள்ள இணைப்புச் சாலையானது குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் உள்ளது. இதனால் இந்த கோயிலுக்கு வருகை தரும் பக்தா்கள் பல்வேறு சிரமங்களை அடைகின்றனா்.
அதேபோல், கோயில் வளாகத்தில் பக்தா்களின் வசதிக்காக கட்டப்பட்ட கழிப்பறைகள் போதிய பராமரிப்பின்றி உள்ளன. இதனால் கோயிலுக்கு வருகை தரும் மகளிா், சிறுவா், முதியோா் உள்ளிட்ட பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை அடைகின்றனா்.
மேலும், அப்பகுதி விவசாயிகள் சிலா் கோயில் வளாகத்தில் கால்நடைகளை கட்டி வைப்பதுடன், வைக்கோல்களை குவித்து வைத்துள்ளனா். அதேபோல், கோயில் வளாகம் முள்புதா்களுடன் தூய்மை இல்லாமலும் இருப்பதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.
எனவே, இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், மணியம்பாடி அருள்மிகு ஸ்ரீ வெங்கட்ரமண சுவாமி திருக்கோயிலுக்கு செல்லும் தாா்ச் சாலையை சீரமைத்தும், பக்தா்களுக்கு தேவையான மின் விளக்குகள், குடிநீா், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பு.