மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை
By DIN | Published On : 06th October 2019 05:48 AM | Last Updated : 06th October 2019 05:48 AM | அ+அ அ- |

பாப்பிரெட்டிப்பட்டியில் மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ஜங்காலஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி காளி மகன் கா.குமார். இவர், சென்னை கே.கே. நகரில் மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணிபுரிகிறார்.
வெள்ளிக்கிழமை கே.கே. நகரில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, மோட்டார் வாகன ஆய்வாளர் குமாரிடமும் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் விசாரணை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து, பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள குமாரின் அடுக்குமாடி வீட்டுக்குச் சென்று தருமபுரி டி.எஸ்.பி (பொ) கிருஷ்ண ராஜன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சுமார் 2 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனையில் குமாரின் வீட்டில் ஆவணங்கள், பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை என லஞ்ச ஒழிப்புப் போலீஸார் தெரிவித்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...