ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 02nd September 2019 03:53 AM | Last Updated : 02nd September 2019 03:53 AM | அ+அ அ- |

ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தருமபுரி அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் ஏ.சேகர், தமிழாசிரியர் கழக மாநில அமைப்பு செயலர் ராசா.ஆனந்தன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற கழக மாவட்டத் தலைவர் பி.எம்.கௌரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் கே.புகழேந்தி, தமிழ்நாடு நடுநிலை,உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் கழக மாவட்டச் செயலர் ச.கவிதா, மாவட்டத் தலைவர் பி.துரைராஜ், ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் பி.பி.முருகேசன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், சமூகநீதிக்கு எதிரான தேசிய புதிய கல்விக் கொள்கை 2019-ஐ முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்.தொடக்க கல்வியை அழித்தொழிக்கின்ற அரசானை 145-ஐ உடனடியாக திரும்பப்பெற வேண்டும். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளோடு இணைப்பதை கைவிட வேண்டும்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்-பணியாளர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள 17-பி, ஒழுங்கு நடவடிக்கைகள், பணி மாறுதல் ரத்து செய்யவேண்டும். காவல் துறையால் புனையப்பட்டுள்ள குற்ற வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். மாநில ஒருங்கிணைப்பாளர் மு.சுப்பிரமணியன் பணி ஓய்வுபெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம், ஜாக்டோ-ஜியோவின் உயர்நிலை குழு உறுப்பினர் மா.ரவிச்சந்திரன் தற்காலிக பணிநீக்கம் ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 9-அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற, ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை தமிழக அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி வருகிற செப்.6-ஆம் தேதி ஒன்றிய அளவில் மாலைநேர ஆர்ப்பாட்டம் நடத்துவது, செப்.13 அன்று கல்வி மாவட்டங்களில் பேரணி நடத்துவது, செப். 24-ஆம் தேதியன்று மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் இருப்பது என இக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.