தீ விபத்து: லாரியில் ஏற்றிவந்த வைக்கோல் எரிந்து சேதம்
By DIN | Published On : 11th September 2019 10:17 AM | Last Updated : 11th September 2019 10:17 AM | அ+அ அ- |

பாலக்கோடு அருகே தீ விபத்தில் லாரியில் ஏற்றி வந்த வைக்கோல் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள மேக்கலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன் (45). இவர், சொந்தமாக லாரி வைத்து வைக்கோல் விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரிலிருந்து, 5 டன் எடை கொண்ட வைக்கோலை ஏற்றிக்கொண்டு, தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள தனது கிராமமான மேக்கலாம்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, சாலையின் மேல் தாழ்வாகச் சென்ற மின் கம்பி லாரியிலிருந்த வைக்கோல் மீது உரசியது. இதையடுத்து, சிறிது நேரத்தில் வைக்கோல் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இது குறித்த தகவலின் பேரில், பாலக்கோடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். இருப்பினும், லாரியில் இருந்த வைக்கோல் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.