தென்கரைக்கோட்டை - கொளகம்பட்டி இணைப்புச் சாலையை சீரமைக்க கோரிக்கை
By DIN | Published On : 11th September 2019 10:18 AM | Last Updated : 11th September 2019 10:18 AM | அ+அ அ- |

தென்கரைக்கோட்டை முதல் கொளகம்பட்டி வரையிலான இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தென்கரைக்கோட்டை முதல் கொளகம்பட்டி வரையிலான இணைப்புச் சாலையானது சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகும். இந்த சாலையை தென்கரைக்கோட்டை, வடகரை, மங்கானேரி, கொளகம்பட்டி, நம்பிப்பட்டி, எச்.தொட்டம்பட்டி, பச்சினாம்பட்டி, ஆண்டிப்பட்டி புதூர், வாழைத்தோட்டம் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த வழியில் அரசு நகர் பேருந்து, தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகள், லாரிகள், டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன.
தென்கரைக்கோட்டை முதல் கொளகம்பட்டி வரையிலான தார்ச் சாலையானது குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் இருப்பதால் இந்த சாலை வழியாக வாகனங்கள் சென்றுவர முடியாத நிலையுள்ளது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் சார்பில் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என அந்தப் பகுதியிலுள்ள கிராம மக்கள் புகார் கூறுகின்றனர்.
எனவே, தென்கரைக்கோட்டை முதல் கொளகம்பட்டி வரையிலான தார்த் சாலையை சீரமைப்பு செய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.